வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியது: அதிமுக, பாஜக, காங்., தேமுதிக வரவேற்பு; திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள்தொடங்கியுள்ளன. இதை அதிமுக,பாஜக, காங்கிரஸ், தேமுதிக வரவேற்ற நிலையில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியலில் 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல், ஜூலை, அக்டோபர் 1-ம் தேதிக்குள் 18 வயதை அடைபவர்கள் வரைவுவாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக பதிவு செய்ய முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டில் முன்திருத்தப் பணி தொடங்குகிறது.

தன்னார்வ அடிப்படையில் ஆதார் விவரங்களை சேகரித்து தற்போதுள்ள வாக்காளர் விவரங்களுடன் இணைத்து வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கும் பணியைதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்காளர் படிவம் ‘6பி’-ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகவோ, அல்லது என்விஎஸ்பி இணையதளம் (https://www.nvsp.in), விஎச்ஏசெயலி (Voter Helpline App) மூலம்ஆன்லைனிலோ சமர்ப்பிக்கலாம். இப்பணி ஆகஸ்ட் 1 தொடங்கி2023 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பு நிறைவடையும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல்அக்டோபர் 24-ம் தேதி வரை நடைபெறும். நவம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 9 முதல்டிசம்பர் 8 வரை பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான படிவங்கள் பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியல்2023 ஜனவரி 5-ல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுகூறியபோது, ‘‘புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் படிவம் 6-ல் ஆதார் எண் இடம்பெறும் வகையில், அச்சிடப்பட்டு இன்று முதல் வழங்கப்படும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை குறித்துதேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்’’ என்றார்.

கட்சிகளுடன் ஆலோசனை

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் – ஆதார் இணைப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர்,செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் (திமுக): வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் உடன்பாடு இல்லை என்று ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். ஒருவருக்கு 5 ஆதார் எண்கள் இருக்கின்றன. 5 கோடி போலி ஆதார் அட்டைகள் பிடிபட்டுள்ளதாக நாடாளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டி.ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக – இபிஎஸ் தரப்பு): பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வலியுறுத்தியுள்ளோம். ஆதாரை வாக்காளர் பட்டியலில் இணைப்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.

கோவை செல்வராஜ் (அதிமுக – ஓபிஎஸ் தரப்பு): மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் தேனி, கோவை,நெல்லை மாவட்டங்களில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பாஜக): ஆதார் எண் இணைப்பை முழுமையாக வரவேற்கிறோம். இதை கட்டாயப்படுத்த வேண்டும்.

தாமோதரன், நவாஸ் கனி (காங்கிரஸ்): ஆதார் திட்டத்தை காங்கிரஸின் திட்டமாக கருதி ஆதரவு தெரிவித்துள்ளோம்.

பெரியசாமி, ஏழுமலை (இந்தியகம்யூனிஸ்ட்), ஆறுமுக நயினார்,ராஜசேகர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதை ஆட்சேபித்துள்ளோம். ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் சாதாரணமக்களின் பல சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. வாக்குரிமையை பறிக்கும் ஆபத்தும் உள்ளது.

பார்த்தசாரதி (தேமுதிக): யாராக இருந்தாலும் ஆதார் எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்ற கட்டாய சூழலை கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதவிர, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.