படத் தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், தாணுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி ரெய்டு – பின்னணி என்ன?

மதுரை, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக இன்று தகவல் வெளியாகியிருக்கிறது.

திரைப்படத் துறையைச் சார்ந்த பைனான்ஸியரும், தயாரிப்பாளருமான அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர். பிரபு, லட்சுமணன், ஞானவேல்ராஜா, சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட பலரின் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பிரகாசம் சாலையிலுள்ள தாணுவின் அலுவலகத்தில் இரண்டு வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஃபைனான்ஸியர் அன்புச்செழியனின் சென்னை வீடு, அலுவலகங்களிலும் இன்று காலை ஐந்து மணியிலிருந்து சோதனை நடக்கிறது. இது போலத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. மதுரையில் 10 இடங்கள், சென்னையில் 30 இடங்கள் என மொத்தம் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள்.

எஸ்.ஆர். பிரபு, ஞானவேல்ராஜா

இன்று அதிகாலை முதல் திரைத்துறையினர் வீடுகளிலும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது என்ற தகவலைக் கேள்விப்பட்ட பல பிரபலங்கள் தங்கள் வீடுகளுக்கும் ரெய்டு வருவார்களோ என்ற அச்சத்தில் உள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

சினிமாவில் அதிக அளவில் பணம் புழங்குவதால், கணக்கு வழக்குகள் சரியாகக் காட்டப்பட்டுள்ளனவா, வரி ஏய்ப்பு எதுவும் நடைபெற்றதா போன்ற சோதனை அடிப்படையில்தான் இந்தத் தீவிர சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.