சென்னை: சென்னையில் 46% பேர் ‘மாஸ்க்’ அணிய விரும்பவில்லை என்று சென்னை மாநகராட்சி, ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்தாலும், அவ்வப்போது கொரோனா பாதிப்பு திடீர் திடீரென உயர்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் முக்கவசம் அணிய மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் நம் மக்களோ, முகக்கவசம் அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. முக்கவசம் அணியாமல் நடமாடுபவர் களைத்தான் அதிகமாக பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வு, அதை அணியும் பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது, முகக்கவசம் அணிவது தொடர்பாக, இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக மொத்தம் 431பேரிடம் கருத்து கேட்டுள்ளார்கள். அதில் 80சதவீதம் பேர் குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள்.
முகக்கவசம் கொரோனா வைரஸ் பரவல் குறைய உதவுகிறது என்பது தெரியுமா? என்ற கேள்விக்கு 86.7 சதவீதம் பேர் ஆமாம் என்று பதில் அளித்துள்ளார்கள். முகக்கவசம் பற்றி எதுவும் தெரியாது என்று 4.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். பொது போக்குவரத்தில் செல்லும் போது முகக்கவசம் தேவை என்று கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு 85.2 சதவீதம் பேர் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். விருப்பப்பட்டால் அணியலாம் என்று 10.9 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளார்கள்.
முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்துவதை 46.5 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். 47.5 சதவீதம் பேர் விரும்பவில்லை. 46 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவது பிடிக்கவில்லை என்றே தெரிவித்துள்ளர்கள்.
இந்த ஆய்வுமூலம் பெரும்பாலானவர்கள், முகக்கவசம் அணிவதை தவிர்க்கும் எண்ணம் கொண்டவர்களாகவே இருப்பது தெரிய வந்துள்ளது.