நீலகிரி மாவட்டத்தில் ஓடாத காவல்துறை வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பியதாக முறைகேட்டில் ஈடுபட்டதாக தலைமைக் காவலர் உட்பட 3 காவலர்களை பணியிடை நீக்கம்செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆயுதப் படை காவல் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில், ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பியதாகக் கூறி ரூபாய் 10 முதல் 15 லட்சம் வரை போலியான பில்களை வாங்கி கணக்கு காட்டியுள்ளனர்.
இதுகுறித்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து தலைமைக் காவலர் ரகமத் அலி, காவலர்கள் அருண்குமார் மற்றும் வேலு ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அத்துடன் இவர்கள் மூவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM