காஜியாபாத்: திருட்டு, கொலை வழக்கில் சிக்கிய ஒருவர் 30 ஆண்டாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிலையில், கடந்த 15 ஆண்டில் 28 படங்களில் நடித்துள்ளார். தமிழகத்திலும் சுற்றித் திரிந்த அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் பானிபட் அடுத்த நரைனா கிராமத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற பாட்ஷா என்பவர், இந்திய ராணுவத்தில் சிக்னல் படைப்பிரிவில் பணியாற்றினார். கடந்த 1980ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் சிறு குற்றங்களில் ஈடுபட்டார். கார்கள், இரு சக்கர வாகனங்களை திருடும் வேலையில் ஈடுபட்டு வந்தார். போலீசார் அவரை கைது செய்தாலும் கூட, ஜாமினில் வெளியே வந்து மீண்டும் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அதனால் 1988ம் ஆண்டு வாக்கில் அவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் கடந்த 1992ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பிவானியில் கொள்ளையடிக்க முயன்ற போது, பைக்கில் சென்றவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவானார். அதனால் ஓம்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஓம்பிரகாஷ், போஜ்புரி படங்களில் நடிப்பதற்காக சினிமா துறைக்குள் நுழைந்தார். அங்கு எந்த வேலையை கொடுத்தாலும் செய்து வந்தார். இதுவரை 28 படங்களில் நடித்துள்ளார். இருந்தும் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் காஜியாபாத்தின் ஹர்பன்ஸ் நகரில் சினிமா ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த ஓம்பிரகாஷை, தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலைக்காக தற்போது ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டு இருப்பது உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி தீபக் குமார் கூறுகையில், ‘கடந்த 1992ல் செய்த கொலைக்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு ஓடி ஒளிந்து கொண்டார். கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் தமிழக கோயில்களை சுற்றிவந்துள்ளார். அதன்பின் வடமாநிலங்களுக்கு செல்லும் லாரியை பிடித்து காஜியாபாத்திற்கு வந்து சேர்ந்தார். ஹர்பன்ஸ் நகரில் நிலம் ஒன்றை வாங்கினார். இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கொலை சம்பவத்திற்கு பின், தனது அரியானா குடும்பத்துடனான அனைத்து தொடர்பையும் துண்டித்துக்கொண்டார். கைதுக்கு பயந்து தனது கிராமத்திற்குச் செல்லவில்லை. ஓம் பிரகாஷ் மீது ஐந்து குற்ற வழக்குகள் உள்ளன. அரியானாவில் மற்றும் ராஜஸ்தானில் தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2000ம் ஆண்டுவாக்கில் போஜ்புரி திரைப்படங்களில் எடுபுடி வேலைக்காக சென்றவர் கடந்த 15 ஆண்டுகளில் 28 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தில் ஏட்டாகவும், ‘தக்ராவ்’ என்ற படத்தில் கிராமத் தலைவராகவும் நடித்துள்ளார். சினிமா மூலம் கிடைத்த சிறு வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் போலீசிடம் சிக்கியுள்ளார். அவரது இருப்பிடம் குறித்து தகவல் அளித்தவருக்கு ரூ. 25,000 வெகுமதி அளிக்கப்பட்டது’ என்றார்.