மலப்புரம்: கேரளாவில் மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தில் 5-வது நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் 7-வது பாதிப்பு ஆகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கேரளாவில் உயிரிழந்தார். இதனையடுத்து திரிச்சூர் மாவட்டத்தில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவரது உயிரிழப்புக்கு குரங்கு அம்மை மட்டும்தான் காரணமா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த 30 வயதுடைய நபருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ளது. இவர் கடந்த 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தார். இப்போது அந்த நபருக்கு மலப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த நபர் தனது குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட 10 பேருடன் மட்டுமே தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை என்பது பெரியம்மை பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸால் உருவாகும் நோய். இது மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவலாக இருந்துவந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது.
மத்தியக் குழு அமைப்பு: நாட்டில் குரங்கு அம்மை நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் நோய் பரவலை எதிர் கொள்வதற்கான வழிகாட்டுதலை அரசுக்கு அளிக்கவும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் தலைமையில் பணிக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
நோய் கண்டறிதல் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நோய் தொற்றுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதற்கான வழி காட்டுதலையும் இக்குழு அரசுக்கு அளிக்கும். பொது சுகாதாரம் தொடர்பான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கேபினட் செயலாளர், சுகாதார செயலாளர், பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் மற்றும் பிற உயரதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பணிக்குழு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
பணிக்குழு தலைவர் வி.கே.பால் கூறும்போது, “குரங்கு அம்மை பிரச்சினையை எதிர்கொள்ள ஐசிஎம்ஆர்-ன் 15 ஆய்வகங்கள் கொண்ட வலையமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது” என்றார்.