கேரள மாநிலம், மாட்டூல் பகுதியைச் சேர்ந்தவர் அஃப்ரா (16). இவர் முதுகுத் தண்டு தசைச் சிதைவு (எஸ்.எம்.ஏ) நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இந்த நோயின் காரணமாகச் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அஃப்ராவின் சகோதரர் முகமதுக்கும் இதே முதுகுத் தண்டு தசைச் சிதைவு (எஸ்.எம்.ஏ) என்ற அரிய வகை நோய் இருப்பது தெரியவந்தது.
அஃப்ராவின் தம்பிக்கு வந்திருக்கும் அரிய வகை நோயைக் குணப்படுத்த வேண்டுமென்றால், அதற்குரிய மருந்துகளுக்குப் பல லட்சம் செலவிட வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். அதிலும், குறிப்பாக ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அஃப்ரா குடும்பத்தினரால் தங்களின் ஏழ்மை நிலை காரணமாக தங்கள் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்குப் பணம் திரட்ட முடியவில்லை. ஒருகட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் கையறு நிலையில் சிறுவனின் உடல்நிலை குறித்து வருத்தப்பட்டபோது, சிறுமி அஃப்ரா தன் தம்பி உயிரைக் காப்பாற்ற தன்னால் முடிந்ததைச் செய்தாக வேண்டுமென முடிவெடுத்தார். ஆனால், அவரால் எழுந்துகூட நிற்க முடியாது… இருப்பினும் மனம் தளராத அஃப்ரா சமூக வலைதளம்மூலம் தன்னுடைய தம்பியின் சிகிச்சைக்கு நிதி திரட்ட முடிவுசெய்தார்.
அதையடுத்து சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தன் தம்பிக்கு வந்திருக்கும் அறிய வகை நோய் குறித்து சமூக வலைதளங்களில் விளக்கி வீடியோ பதிவிட்டு உதவி கோரினார்.
கடந்த ஜூன் மாதம் அஃப்ரா இது தொடர்பாக வெளியிட்ட வீடியோ இணையவெளியில் ஆயிரக்கணக்கானோரைச் சென்றடைந்தது. விளைவாகச் சிறுவனின் சிகிச்சைக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பலர் தங்களால் இயன்ற தொகையை மனமுவந்து அளித்து உதவினார்கள். இதன் மூலம் அஃப்ரா மிகக் குறுகிய காலத்தில் ரூ.46 கோடி திரட்டினார்.
அந்தப் பணத்தைக் கொண்டு, அஃப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து, அதே மருத்துவமனையில் அஃப்ராவும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று சிறுமி அஃப்ரா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அஃப்ராவின் மரணச் செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.