சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாடில் போட்டி நடக்கும் இடத்திற்கும், பத்திரிகையாளர்கள் அமர்ந்திருக்கும் அறைக்கும் மாறி மாறி நடந்துகொண்டிருந்தார் ஒருவர். அவரின் அடையாள அட்டையைப் பார்த்ததும் டென்மார்க் கேப்டன் எனத் தெரிந்தது. கிராண்ட் மாஸ்டரான சூன் பெர்க் ஹேன்சன்தான் தற்போதைய டென்மார்க் அணியின் கேப்டன். இதுவரையில் எட்டு ஒலிம்பியாடுகளில் விளையாடியிருக்கிறார் சூன். அவரிடம் பேசியதிலிருந்து…
சென்னை எப்படி இருக்கு?
“இதுக்கு முன்னாடி இரண்டு தடவை இந்தியாவுக்கு விளையாட வந்திருக்கேன். டெல்லியில யாருமே நாங்க சொல்ற பிரச்னைகளை காது கொடுத்துக் கேட்க மாட்டாங்க. இங்க என்ன பிரச்னைனாலும் கேட்கறாங்க. பிரச்னைகளைத் தீர்த்தும் வைக்கறாங்க, ரொம்பவே சந்தோஷமா இருக்கு.”
சென்னை வெயிலுக்குப் பழகிட்டீங்களா?
“உலகமே சூடாகிட்டுத்தான் இருக்கு. இங்க முழு நேரமும் ஏசில இருக்கறதால பெருசா தெரியல. டென்மார்க்குல ஒவ்வொரு வருஷமும் சம்மர் இன்னும் சூடாகுது, வின்டர் இன்னும் குளிரா மாறிக்கிட்டு இருக்கு. ஆனா, எங்களுக்கு முன்னாடியே ஆப்பிரிக்காவுல இருக்குற சில நாடுகள் எல்லாம் வாழத் தகுதியற்றவையா மாறிடும். மக்கள் குடிபெயர்தல் இன்னும் அதிகமாகும். உலகத்துக்கு இது ரொம்பவே சோதனையான காலம்.”
சென்னை உணவு எல்லாம் ஓகேவா இருக்கா?
“எல்லாமே செமயா இருக்கு. உங்க ஊர்ல எல்லாத்தையும் மசாலாவா செய்றீங்க. சாப்பிட நல்லா இருக்கு. ஆனா, வெயிட் போடுமோன்னு பயமா இருக்கு. அதனாலயே சில விஷயங்கள அவாய்டு பண்றேன். நான் வீகன் இல்ல. ஆனா அடுத்த சில வாரங்களுக்கு வீகன் உணவு முறை முயற்சி பண்ணிப் பார்க்கலாம்ன்னு இருக்கேன்.”
எப்படி இவ்ளோ பேசறீங்க?
“டென்மார்க்ல நான் இரண்டு பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதறேன். தனியா ஒரு பத்திரிகையும் வச்சிருக்கேன். அதான் விளையாடற இடத்துல எல்லோரையும் உட்கார வச்சுட்டு, மீடியா ரூம்ல வந்து நியூஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன். ஏன்னா, பத்திரிகையையும் நடத்தி ஆகணுமே!”
இந்த முறை அமெரிக்கன் டீமை எப்படிப் பார்க்கறீங்க?
“அவங்கள டீம்னு எப்படி சொல்ல முடியுமான்னு எனக்குத் தெரியல. இங்க எல்லா நாடுகளும், தங்கள் நாட்டு வீரர்களைக் கூட்டிட்டு வந்து விளையாடறாங்க. ஆனா, அமெரிக்கா அப்படியில்லை. லெவோன் அரோனியன் அர்மேனிய நாட்டுக்காரர். வெஸ்லி சோ 2014 வரைக்கும் பிலிப்பைன்ஸுக்கு ஆடிக்கிட்டு இருந்தார். Leinier Domínguez 2018 வரைக்கும் கியூபாவுக்கு ஆடியிருக்கார். நல்ல விளையாடற வீரர்கள் எல்லாம் இப்போ அமெரிக்காவுக்கு விளையாடுறாங்கன்னு வேணும்னா சொல்லலாம். மத்தபடி நிறைய அணிகள் இந்த முறை வெல்லும் வாய்ப்போடதான் இருக்காங்க.”
ரஷ்யா தடை செய்யப்பட்டதை எப்படிப் பார்க்கறீங்க?
“அதெல்லாம் ஒருவித அரசியல்தான். ரஷ்ய வீரர்கள் விளையாடக்கூடாது. ஆனா, இப்பவும் FIDEல ரஷ்யா நபர்கள் இருக்கத்தான செய்றாங்க. ஆனா, ரஷ்யா செஞ்சுக்கிட்டு இருக்கறது அபாயகரமான விஷயங்கள். யார் சொன்னாலும் ரஷ்யா கேட்கப் போறதில்ல.”
பேசி முடித்ததும், “சரி, நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்!” என நம்மிடமே திரும்பினார் சூன் பெர்க் ஹேன்சன். அவர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரும் என்பதால், சீரியஸாக நம்மிடமே இரண்டு கேள்விகளை முன்வைத்தார். இந்தியா சார்பாக அதற்கான பதில்கள் என்னவாக இருக்கலாம் என்பதை வாசகர்களே கமென்ட்டில் தெரிவிக்கலாம். அந்தக் கேள்விகள்…
ஏன் சீனா இந்தியாவுக்கு விளையாட வரல. உங்களுக்கும் அவங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை?
பாகிஸ்தான் ஏன் கடைசி நிமிஷத்துல ஒலிம்பியாட்ல இருந்து வெளியேறிட்டாங்க?