நீலகிரி மாவட்டத்தில் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதில் மோசடி நடந்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் டீசல் நிரப்பும் பணியில் நியமிக்கப்பட்டிருந்த ஆயுதப்படையின் மூன்று காவலர்களை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அந்த மூன்று பேரும் மோசடியில் ஈடுபட்டு நிதியை கையாடல் செய்துவந்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அந்த மூவரையும் சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர் நீலகிரி மாவட்டக் காவல்துறை உயரதிகாரிகள்.
இந்த மோசடியின் பிண்ணனி குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “நீலகிரி காவல்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான வாகனங்கள் இருக்கின்றன. இந்த வாகனங்களுக்கு தனியார் பெட்ரோல் பங்குகள் மூலம் டீசல் நிரப்பப்படுகிறது. டீசல் நிரப்பும் பணியை ஆயுதப்படையைச் சேர்ந்த ரஹமத் அலி, அருண்குமார், வேலு ஆகிய மூன்று காவலர்கள் மேற்கொண்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக காவல்துறை வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இது குறித்து நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்துக்குப் புகார் சென்றது. வாகனங்களுக்கு 20 லிட்டர் டீசல் நிரப்பிவிட்டு, 30 லிட்டர் எனக் கூடுதலாக 10 லிட்டர் எழுதி பணத்தை கையாடல் செய்துவந்திருக்கின்றனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்களையும் சரிக்கட்டி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இது போதாதென்று, குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்புவதற்கு பங்க் உரிமையாளர்களிடம் கமிஷன் தொகையும் பெற்றுவந்திருக்கின்றனர். மூன்று காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் நீலகிரி எஸ்.பி ஆசிஷ்ராவத். மூவரையும் விசாரித்து வருகிறோம்” என்றார்.