பெங்களூரு : ”ஆதார் அடையாள எண்ணை, வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைத்தால் யாரும் ஏமாற்ற முடியாது. வாக்களிப்பது நமது கடமை. மற்றவர்களை ஓட்டளிக்க துாண்ட வேண்டும்,” என மாநில தலைமை செயலர் வந்திதா ஷர்மா தெரிவித்தார்.இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள தேர்தல் சீர்திருத்தங்கள் தொடக்க நிகழ்ச்சி, பெங்களூரு விகாஸ் சவுதாவில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியை, மாநில தலைமை செயலர் வந்திதா ஷர்மா துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மாநில மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களை அமல்படுத்தினால் நமது மாநிலத்திற்கு நல்ல பெயர் கிடைக்கும்.எனவே முதலில் அரசு ஊழியர்களாகிய நாம், வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்து, பின்னர் அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.ஆதார் அடையாள எண்ணை, வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைத்தால் யாரும் ஏமாற்ற முடியாது.
வாக்களிப்பது நமது கடமை. மற்றவர்களை ஓட்டளிக்க துாண்ட வேண்டும்.குடிமக்கள், தேர்தல் நடைமுறையில் சுலபமான முறையில் பங்கேற்பதற்கு உதவியாக இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள தேர்தல் சீர்திருத்தங்கள் நாடு முழுதும் நேற்று துவக்கப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா பேசுகையில், ”தேர்தல் சீர்திருத்தத்தில் இளைஞர் சமுதாயத்தினர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.”முன்பு போல், ஜனவரி 1ம் தேதி வரை மற்றும்18 வயது நிரம்பும் வரை காத்திருக்க தேவை இல்லை. 17 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement