கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ராஜ்ய சபா தேர்தலில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குதா பகீர் புகார் தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தான் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சர் ராஜேந்திர குதா தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ராஜ்ய சசபா தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்குச் சாதகமாக வாக்களிக்க எனக்கு ரூ.25 கோடி தருவதாகச் சொன்னார்கள். இது குறித்து என்னுடைய மனைவிடம் சொன்னேன். அவர், `நாம் நல்லவர்களாகவே இருப்போம்’ என்று சொல்லிவிட்டார். 2020-ம் ஆண்டு சச்சின் பைலட் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது அதிருப்தியாளர்களுக்கு ஆதரவாக இருக்க ரூ.60 கோடி கொடுப்பதாகச் சொன்னார்கள். இது குறித்தும் என் மனைவியிடம் சொன்னேன். அவர் பணம் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்” என்று தெரிவித்தார்.
ஆனால், அமைச்சர் எந்தக் கட்சி தரப்பில் தனக்குப் பணம் கொடுக்க முன் வந்தார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற 6 எம்.எல்.ஏ-க்கள் 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 2020-ம் ஆண்டு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்குச் சாதகமாக 18 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியபோதும், 6 எம்.எல்.ஏ-க்களும் அதிருப்தியாளர்களுடன் செல்லாமல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்தனர்.
எனவே கடந்த நவம்பர் மாதம் ராஜஸ்தானில் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டபோது ராஜேந்திர குதாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. ராஜஸ்தானில் நடந்த 4 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தலில் ஜீ டிவி உரிமையாளர் சுபாஷ் சந்திரா பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அவருக்காக பா.ஜ எம்.எல்.ஏ-க்களை விலை பேசமுயன்றது. ஆனால் அந்தத் தேர்தலில் சுபாஷ் சந்திரா தோல்வி அடைந்துவிட்டார்.