தமிழக அரசு மீது நாடாளுமன்ற மக்களவையில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மறைமுக குற்றச்சாட்டு வைத்த நிலையில், அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மக்களவையில் தமிழக மீனவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன்வசதி கிடைக்குமா என்று திமுக எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கிசான் கிரெடிட் கார்டு வசதிகள் குறித்து விளக்கினார் . தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ.க. குறிப்பிட்டதை போல மீனவர்களுக்கு கடன்வசதி அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஆனால், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படவில்லை என தமிழக அரசை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
இந்த மறைமுக விமர்சனத்துக்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் பாலு கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் முருகன் தான் எந்த கட்சி அல்லது அரசு பெயரை குறிப்பிடவில்லை என விளக்கம் அளித்தார். சலசலப்பு தொடர்ந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு அமைதியாக கேள்வி நேரம் தொடர கோரிக்கை வைத்தார். அவையில் தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தொடர்ந்தநிலையில், கேள்வி நேரம், விமர்சனம், பதில் விமர்சனத்துடன் முடிவடைந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM