ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட கட்டுப்பாடுகள் விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து சுமார் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரிநீர் வெளியேற்றும் சூழல் எழுந்துள்ளது. அண்மையில் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் சிலர் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்தது. இதுபோன்று மீண்டும் நடக்காதவகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், நாளை ஆடிப்பெருக்கு விழாவின் போது ஆறுகளில் நீராடும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட செய்தியில், காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மக்கள் நீராட வேண்டும். மேட்டூர் அணை கரையோரம், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்கள் குளிக்கத் தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பக்தர்கள் நீராட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in