வாஷிங்டன்:அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் – ஜவாஹிரி, 71, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., நடத்திய அதிரடி ‘ட்ரோன்’ தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஒரு வீட்டில் அவர் பதுங்கியிருந்த போது, இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.அமெரிக்காவில், 2001 செப்., 11ல் விமானங்களை கடத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், 2011ல் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது, அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார்.
ஒசாமா பின்லேடனின் வலது கரமாக இருந்த அய்மான் அல் – ஜவாஹிரி, அல் – குவைதாவின் தலைவராக பொறுப்பேற்றார். அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட இவரை, அமெரிக்க உளவு அமைப்புகள் தேடி வந்தன. அவரை கொல்வதற்கு சில வாய்ப்புகள் அமெரிக்க படைகளுக்கு கிடைத்தபோதும், அவர் தப்பிவிட்டார்.
இந்நிலையில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு வீட்டில் அவர் இருந்தபோது, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.கடந்த 31ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த ஜோ பைடன், முதல் முறையாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த இந்த பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார். அவரைக் கொல்வதற்கு, துல்லிய தாக்குதல் நடத்த சி.ஐ.ஏ.,வுக்கு அனுமதி அளித்தேன். அதன்படி, தங்களுடைய முழு திறமையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு எதிராக எவர் செயல்பட்டாலும், அவர்கள் எங்கு இருந்தாலும், எவ்வளவு காலதாமதமானாலும் தண்டிக்கப்படுவர். அமெரிக்க மண்ணில், 2,977 பேர் உயிரிழந்த தாக்குதலுக்கு மூளையாக இவர் செயல்பட்டுள்ளார். இதைத் தவிர அமெரிக்காவுக்கு எதிராகவும், பல நாடுகளுக்கு எதிராகவும் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இனி இவர் குறித்த அச்சம் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளதாவது:கடந்த 2001ல் அமெரிக்கா மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அல் – குவைதா அமைப்பின் மீதான நடவடிக்கைகள் துவங்கின. பல இடங்களுக்கு தப்பிச் சென்ற ஜவாஹிரி, காபூலில் உள்ள ஒரு வீட்டில் தன் குடும்பத்தாரை சந்திக்கச் சென்ற தகவல் கிடைத்தது.
அதன்படி, சி.ஐ.ஏ., அதிகாரிகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக இரண்டு ஏவுகணைகளை செலுத்தினர். அதில் அவர் கொல்லப்பட்டார். ஜவாஹிரி வீட்டின் பால்கனியில் இருந்தபோது, இந்த தாக்குதல் துல்லியமாக நடந்தது. வீட்டின் கீழ் பகுதியில் ஜவாஹிரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் இருந்ததால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவுக்கு இடையில் அமைந்துள்ள எகிப்தைச் சேர்ந்தவர் ஜவாஹிரி. டாக்டரான இவர், தீவிர மதப்பற்றாளராகவும் இருந்தார். இதற்கிடையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் துவங்கினார். கடந்த 1981ல், எகிப்து அதிபர் அன்வர் சதாட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அதைத் தொடர்ந்து ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு ஏற்பட்டு, தன் பயங்கரவாத அமைப்பை, அல் – குவைதாவுடன் இணைத்தார்.
பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டி தந்ததுடன், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தார்.இவரது தலைக்கு, 196 கோடி ரூபாய் விலையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ல், இந்தியாவில் அல் – குவைதா அமைப்பின் கிளையை உருவாக்குவதாக அறிவித்தார். ‘இந்தியாவில் ஜிகாதிகளின் கொடியை பறக்க விட வேண்டும். இந்திய மண்ணில், இஸ்லாமிய அரசு அமைய வேண்டும்’ என, அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். அப்போது, இந்தியக் கிளையின் தலைவராக ஆசிம் உமர் என்ற பயங்கரவாதியை நியமித்தார். ஆப்கானிஸ்தானில் 2019ல் நடந்த நடவடிக்கையில், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே, தங்களுடைய எல்லைக்குள் இருந்த ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றதற்கு, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல், தங்களுடைய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தலிபான் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாதுகாப்பான உலகம்!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளென்கென் கூறியுள்ளதாவது:ஆப்கானிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதத்தை அழிப்போம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளோம். ஜவாஹிரி கொல்லப்பட்டதால், உலகம் பாதுகாப்பானதாக மாறியுள்ளது.அமெரிக்கா மற்றும் அதன் மக்களுக்கு எதிராகவும், நம் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் யார் செயல்பட்டாலும், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா பயன்படுத்திய புதிய ஆயுதம் என்ன?
பயங்கரவாதி ஜவாஹிரியை கொல்வதற்கு, அமெரிக்க உளவு அமைப்பு புதிய ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.ட்ரோன் வாயிலாக இரண்டு ஏவுகணைகள் செலுத்தப் பட்டு, ஜவாஹிரி கொல்லப்பட்டார். ஆனால், அவருடன் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் வெடி சத்தமும் கேட்கவில்லை; அவர் இருந்த வீட்டில் கண்ணாடி ஜன்னல் போன்றவையும் சேதமடையவில்லை.
‘ஹெல்பயர் ஆர்., 9 எக்ஸ்’ என்ற நவீன ஆயுதத்தை, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆயுதம் ஏதுமில்லாத ஏவுகணையில் இது பொருத்தப்பட்டு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன ஆயுதத்தில் வெடி பொருள்கள் இருக்காது; அதே நேரத்தில் சக்தி வாய்ந்த பிளேட்கள் இருக்கும். இது, தன் இலக்கை துளைத்து வெட்டி சாய்த்துவிடும்.
கடந்த 2017ல், சிரியாவில் காரில் பயணித்த அல் – குவைதா மூத்த தலைவர் அபு அல்கயார் அல்மஸ்ரியும், இது போன்ற ஆயுதத்தால் கொல்லப்பட்டார். அப்போதும் ட்ரோன் வாயிலாகவே அந்த ஆயுதம் செலுத்தப்பட்டது. காரில் மேற்பகுதி வழியாக துளைத்து சென்று, உள்ளே இருந்த அவர் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், பயங்கரவாதத் தலைவர்களை கொல்வதற்காக இந்த ஆயுதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மறைக்க முயற்சி?
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு, அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறது. பயங்கரவாதி ஜவாஹிரி கொல்லப்பட்ட விவகாரத்தை மறைக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது.காபூலில் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக கூறப்படும் வீடு, ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானிக்கு சொந்தமானதாகும். தற்போது, நாட்டின் உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி உள்ளார்.அதையடுத்து, இந்த வீட்டில் ஜவாஹிரி தங்கவில்லை என்ற தகவலை, அந்த அமைப்பு வெளியிட்டது. மேலும், அந்த வீட்டுக்குள் நுழைவதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடாமல் துரத்திய சி.ஐ.ஏ.,
அமெரிக்காவில், 2001ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்து தந்தது ஜவாஹிரி என்று கூறப்படுகிறது. விமானத்தை கடத்தி, அதையே ஆயுதமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் யோசனையை இவர் கூறியதாக தெரிகிறது.கடந்த 2011ல், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அல் – குவைதாவின் தலைவராக ஜவாஹிரி பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து அவரைப் பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., பல முயற்சிகளை மேற்கொண்டது.
தொடர்ந்து தன் இருப்பிடத்தை அவர் மாற்றிக் கொண்டே வந்தார். பாகிஸ்தானில் மலைப் பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆப்கானிஸ்தானில் உள்ள சிறிய கிராமத்தில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.இவ்வாறு மாறுபட்ட தகவல்கள் வந்தபோதும், ஜவாஹிரியைப் பிடிக்க சி.ஐ.ஏ., தொடர்ந்து கண்காணித்து வந்தது.
ஜவாஹிரியின் மனைவி, மகள், பேரக் குழந்தைகள், காபூலில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதை சி.ஐ.ஏ., உறுதி செய்தது. இதையடுத்து, அந்த இடத்துக்கு ஜவாஹிரி வருவார் என்பதற்காக காத்திருந்தது. இதன்படி சில மாதங்களுக்கு முன், காபூலில் உள்ள வீட்டுக்கு ஜவாஹிரி வந்தார். அவரது அன்றாட நடவடிக்கைகளை சி.ஐ.ஏ., கண்காணித்து, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு அவ்வப்போது தகவல் தெரிவித்தது.
சக அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ரகசிய ஆலோசனை நடத்தி, ஜவாஹிரியை கொல்வதற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதையடுத்து, அமெரிக்க படையினரால் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டு, ஜவாஹிரி கொல்லப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்