புதுடெல்லி: தேசிய கிராம தன்னாட்சித் திட்டத்தில் நிலுவைத் தொகை இருப்பது ஏன்? என திமுக எம்பி கனிமொழி செவ்வாய்க்கிழமை மக்களவையில் எழுப்பி கேள்விக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியின் எம்பியான கனிமொழி எழுப்பியக் கேள்வியில், ‘தேசிய கிராம தன்னாட்சித் திட்டம் என்ற பொருள்படியான ’ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான்’ திட்டத்தில் மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டத் தொகைக்கும் விடுவிக்கப்பட்ட தொகைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளதா? இடைவெளி இருப்பது உண்மையென்றால் நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க அரசாங்கம் பரிசீலிக்கிறதா? அவ்வாறு விடுவிக்கப்பட்டால் அதன் விவரங்கள் என்ன? அவ்வாறு இல்லையென்றால் அதற்கான காரணங்கள் என்ன?’என்று கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஸ்ரீகபில் மோரேஷ்வர் பாட்டீல் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியது: ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டம், 2018-19 முதல் 2021-22 -ஆம் ஆண்டு வரை இயற்கையால் ஏற்பட்ட தேவைகள் மற்றும் பல பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.
மாநிலங்களின் வருடாந்திர திட்ட முன்மொழிவுகளை, இந்தத் திட்டத்துக்கு என அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ’எம்பவர்டு கமிட்டி’ என்ற குழு அங்கீகரிப்பதன் அடிப்படையில் நிதி விடுவிக்கப்படும். பொதுவாக இந்த திட்டத்துக்கான நிதி இரண்டு தவணைகளாக வழங்கப்படும். அனுமதிக்கப்பட்ட தொகையில் 50 சதவிகிதம் முதல் தவணையில் வழங்கப்படும்.
ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியில் செலவிடப்படாமல் மாநிலத்தின் வசம் இருக்கும் தொகை இதில் கணக்கில் கொள்ளப்படும். ஒவ்வொரு முறை நிதி விடுவிக்கப்படும் போதும் அந்த நேரத்தில் செலவிடப்படாமல் இருக்கும் முந்தைய நிதியும் கணக்கில் கொள்ளப்படும். செலவழிக்கப்படாத நிலுவைத் தொகை அதிகம் வைத்துள்ள மற்றும் பயன்பாட்டுச் சான்றிதழ்களை வழங்காத மாநிலங்கள் இத்திட்டத்தின் கீழ் முழுமையான நிதியைப் பெறுவதற்கு தகுதியற்றவையாகக் கருதப்படும்.
இத்தகைய மாநிலங்களால் தான் அனுமதிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட தொகைகளுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது. ஏப்ரல்1, 2022 முதல் மார்ச் 31, 2026 வரை செயல்படுத்தப்படுவதற்கான “ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான்” திட்டம் 2022 ஏப்ரல் 13-ம் தேதி அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இப்போது தங்களது வருடாந்திர செயல்திட்டத்தை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.