மதுரை: அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான ஒப்பந்தப் புள்ளி திடீர் என்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு உலக புகழ்பெற்றது. உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக பார்வையாளர்கள் வரை இந்தப் போட்டியைக் காண திரள்வார்கள். ஆனால், ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்கும் இடமும், அதன் வாடிவாசலும் இடநெருக்கடியில் இருப்பதால் பார்வையாளர்கள் அனைவருமே இந்தப் போட்டியை கண்டு களிக்க முடியவில்லை. அதனால், அலங்காநல்லூரில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது.
அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நிரந்தரமான அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் அதற்காக 65 ஏக்கா் நிலம் தேர்வு செய்யப்பட்டது. வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சுற்றுலாத் துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நான்கு மாதங்களுக்குள் விரிவாக திட்ட அறிக்கை தயாரித்து சமர்பிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் தரப்பில் கடந்த 7.7.2022 அன்று ஒப்பந்த புள்ளியானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஒப்பந்த புள்ளியை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தற்போது அறிவித்துள்ளது.
அலங்காநல்லூர் வாடிவாசலில் பாரம்பரியமாக பல நூறு ஆண்டாக ஜல்லிக்கட்டு நடக்கும் நிலையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கு அமைப்பதாகக் கூறி அந்தப் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் திடீரென ஒப்பந்தப் புள்ளி தள்ளி வைப்பதாக கூறி ரத்து செய்யப்பட்டுள்ளது, இந்த திட்டம் கைவிடப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.