சினிமாவில் மூன்றாம் தலைமுறை; அரசியலில் மங்கும் என்டிஆர் குடும்பம்!

ஆந்திராவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்தவர் என்டி ராமாராவ். இவரின் 4ஆவது இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் மர்மமான முறையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
உமா மகேஸ்வரியின் உயிரிழப்பு தற்கொலை என்று சொல்லப்பட்டாலும், அவரின் மரணத்திலும் மர்மம் நீள்கிறது.

என்டி ராமாராவ், 1943ஆம் ஆண்டு மே மாதம் பஸ்வராமா தராக்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு 12 குழந்தைகள் பிறந்தனர்.
சினிமாவில் கொடிகட்டி பறந்த என்டிஆர் அரசியலிலும் கால்பதித்தார். தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கி, சந்தித்த முதல் தேர்தலிலேயே 1983ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார்.

அரசியலிலும் தோல்வி அறியாத தனிக்காட்டு ராஜா ஆகவே இருந்தார். என்.டி., ராமாராவ்வுக்கு பின்னர் தெலுங்கு தேசம் கட்சி அவரது மருமகனான சந்திரபாபு நாயுடு கைகளுக்கு சென்றது. தொடர்ந்து என்.டி.ஆர்.ரின் வாரிசுகள் கட்சியில் இரண்டாம் ஆட்டக்காரர்கள் ஆக்கப்பட்டனர்.
என்.டி.ஆரின் மகள்களும் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இந்த நிலையில் என்.டி. ராமாராவ்வின் 4 மகள்களில் ஒருவர் டகுபதி புரேந்தேஷ்வரி. மற்ற மூவர் மருத்துவர் லோகேஸ்வரி, நர புவனேஸ்வரி கடைக்குட்டி சில நாள்களுக்கு முன்பு மறைந்த உமா மகேஸ்வரி ஆவார்.

இவர்களில் டகுபதி புரேந்தேஷ்வரி, 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். முன்னதாக இவர் 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பபட்லா தொகுதியிலும், 2009ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்திலும் மக்களவை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் மத்திய இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார். இவரின் கணவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பு காங்கிரஸில் முக்கிய பதவி வகித்தவர் ஆவார்.

மற்றொரு மகளான லோகேஸ்வரி மருத்துவர் ஆவார். இவர்களில் நர புவனேஸ்வரியின் கணவர் சந்திர பாபு நாயுடு ஆவார்.
என்டிஆரின் மூத்த மகன் ராமகிருஷ்ணா 1962இல் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இரண்டாவது மகன் ஜெயகிருஷ்ணா ஹைதராபாத்தில் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார்.

பல்வேறு தியேட்டர்களின் அதிபதியான மூன்றாவது மகன் சாய் கிருஷ்ணா 2004ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.
நான்காவது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா பல்வேறு படங்களில்ந நடித்துள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 29, 2014ஆம் ஆண்டு விஜயவாடா செல்லும் போது நலகொண்டா என்ற இடத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

என்டிஆரின் 5ஆவது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா மிகப்பெரிய நடிகராக வலம்வருகிறார்.
இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அகண்டா படம் மாபெரும் வெற்றி பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலகிருஷ்ணா ஹிந்த்பூர் தொகுதி எம்எல்ஏ ஆவார்.
என்டிஆரின் 6 மற்றும் 7ஆவது மகன்களும் ஹைதராபாத்தில் வசித்துவரும் நிலையில் சினிமா துறையில் கோலோச்சுகின்றனர். எட்டாவது மகன் நந்தமுரி ஜெய்சங்கர் கிருஷ்ணாவும் சினிமா தயாரிப்பாளராக உளளார்.

தெலுங்கில் அசைக்க முடியாத சினிமா நட்சத்திரமாக, அரசியல்வாதியாக திகழ்ந்த என்டிஆரின் வாரிசுகள் இன்று சினிமாவில் மட்டும் கோலோச்சுகின்றன. மறுபுறம் அரசியலில் மங்கிவருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.