திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் மழையின் தீவிரம் மேலும் அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாளில் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு, இடுக்கி நெய்யாறு உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்றும் கனமழை பெய்யும் என்பதால், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உட்பட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மற்ற 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் உட்பட 9 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு கடந்த 3 நாளில் 12 பேர் பலியாகி உள்ளனர்.