சென்னை: திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என சுமார் 40 இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர் ஜி.என்.அன்புச்செழியன். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்வது, திரையரங்கம், ஓட்டல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர் `கோபுரம் பிலிம்ஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வெள்ளக்கார துரை, தங்க மகன், மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள அன்புச்செழியனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமம்.
இவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர். அவர் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தை முதலீடாகக் கொண்டு, ஃபைனான்ஸ் தொழில் தொடங்கினார் அன்புச்செழியன். முதலில் சிறு வணிகர்களுக்கு கடன் கொடுக்கத் தொடங்கிய அவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து சினிமா துறையினருக்குக் கடன் கொடுப்பவராக வளர்ந்தார். அதிமுகவிலும் இருந்தார்.
அன்புச்செழியன் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், மதுரையில் குடியேறிய பின்னரே அவரது வளர்ச்சி உச்சமடைந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு, திருப்பித் தராமல் ஏமாற்றும் தொழிலதிபர்களிடம் அவர் கடுமை காட்டியுள்ளார். பல ஆண்டுகளாகவே சினிமா துறையினருக்கு ஃபைனான்ஸ் கொடுத்து தனி ஆளுமையாகச் செயல்பட்டு வரும் அன்புச்செழியன், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீடு, தியாகராய நகர் ராகவய்யா தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
மேலும், மதுரை காமராஜர்புரத்தில் உள்ள அன்புச்செழியனின் வீடு, மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ‘கோபுரம்’ ஓட்டல், செல்லூர் பகுதியில் உள்ள ‘கோபுரம்’ திரையரங்கிலும் சோதனை நடந்தது.
இதேபோல, தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அழகர்சாமி வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு சென்னையில் 10, மதுரையில் 30 என சுமார் 40 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நடிகர் விஜய் நடித்த `பிகில்’ திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2020-ல் அப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். சினிமா நிறுவனம், நடிகர் விஜய், ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கலைப்புலி தாணு
நடிகர் ரஜினி நடித்த கபாலி, தனுஷ் நடித்த அசுரன் போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற படங்களைத் தயாரித்த, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் வீடு மற்றும் பருத்தி வீரன், சிங்கம்-3 உள்ளிட்ட படங்களைத் தயாரித்த, தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ அலுவலகம், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சத்ய ஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் தியாகராஜனின் அலுவலகத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சென்னையில் ஒரே நேரத்தில் சினிமா ஃபைனான்சியர், தயாரிப்பாளர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. கணக்கில் வராத பணத்தில் சினிமா தயாரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
வேலூரில்…
வட ஆற்காடு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ‘எஸ்’ பிக்சர்ஸ் சீனிவாசன். திரைப்பட விநியோகஸ்தராகவும் உள்ளார். இவருக்குச் சொந்தமான ஓட்டல், வேலூர் அண்ணா சாலையில் உள்ளது. இந்த ஓட்டலின் பின்புறம் ‘எஸ்’ பிக்சர்ஸ் அலுவலகம் இயங்கி வருகிறது.
சென்னை வருமான வரித் துறை துணை ஆணையர் பணிக்கர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை இங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கணக்கில் காட்டப்படாத பணம் மூலம் சினிமா தயாரித்தது தெரிய வந்ததுடன், சினிமா தயாரிப்பதற்குப் பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“இந்த ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்படும். அதற்குப் பின்னரே, தொகை எவ்வளவு என்பது தெரியவரும். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வருமான வரி சோதனை நடந்த தயாரிப்பாளர்களுடன், மேலும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமான வரி சோதனை பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.