புதுடெல்லி: ஜூன் மாதத்தில் மட்டும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் கணக்குளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசின் புதிய விதிகளின் கீழ் சமூகவலைதள நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள், அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம், ஆபாசம், சமூக பிளவைத் தூண்டுதல் உள்ளிட்ட தன்மை கொண்ட பதிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக பயனாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். புகார்களை விசாரிப்பதற்கென்று தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். புகார்கள் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விதிகளின் கீழ் வாட்ஸ்அப் நிறுவனம் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கான அறிக்கையை நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளது.
ஜூன் மாதத்தில் 632 புகார்கள் பெறப்பட்டதாகவும் மொத்தமாக 22 லட்சத்து 10 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘பயனாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கென்றே வாட்ஸ்அப் தனி தொழில்நுட்பக் குழுவைக் கொண்டிருக்கிறது. தீங்கு நிகழ்ந்த பிறகு அதை அடையாளம் காண்பதைவிடவும் தீங்கு நிகழாமல் தடுப்பது மிக முக்கியம். தீங்கு விளைவிக்கும் விஷயங்களை தடுப்பதில் வாட்ஸ்அப் முன்னணியில் இருக்கிறது. பயனாளர்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார்.