புதுச்சேரி: ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரி ஊர்வலமாக வந்த சிபிஎம் கட்சியினரை போலீஸார் தடுத்ததால் நேரு வீதியில் 2 மணிநேரம் மறியலில் அவர்கள் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வந்த அரிசி மற்றும் இதர உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரி தலைமைச்செயலகம் நோக்கி ஊர்வலம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை நடத்த சிபிஎம் முடிவு எடுத்தது.
அதையடுத்து இன்று தொடங்கிய ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலச்செயலர் ராஜாங்கம், முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் சுதா, மூத்த நிர்வாகி முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமசந்திரன், கலியமூர்த்தி, தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டம் பெரியார் சிலை அருகே தொடங்கி நேரு வீதி வழியாக வந்தபோது மிஷன் தெரு சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். இதையடுத்து அங்கு நேருவீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி அங்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
இந்நிலையில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அதையடுத்து தலைமைச்செயலரை சந்திக்க மாநிலச்செயலர் ராஜாங்கம், சுதா உள்ளிட்ட ஐந்து பேர் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “கடந்த ஆட்சியில் நடைமுறையில் இருந்த மாநில அரசின் இலவச அரிசி திட்டம். பணம் வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டது. இதை பலரும் எதிர்த்த போதிலும் வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது.
தற்போது 2021 ஏப்ரல் மாதத்தில் இருந்து இத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக கடந்த 15 மாதங்களாக சிகப்பு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ வீதம் 15 மாதங்களுக்கு அரிசிக்கு பதில் ரூபாய் 9000, மஞ்சள் குடும்ப அட்டைக்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ வீதம் 15 மாதங்களுக்கு ரூபாய் 4500 இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோல் வறுமையில் உள்ளோருக்கு சிகப்பு குடும்ப அட்டை வழங்கப்படுவதில்லை.
தலைமைச் செயலகத்தை நோக்கி சென்ற போராட்டம் தற்போது போலீஸாரால் காத்திருப்பு போராட்டமாகியுள்ளது. அடுத்து திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட மதசார்பற்ற அணிகளுடன் இணைந்து ரேஷன் கடைகளை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இந்நிலையில், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நேருவீதியில் சிபிஎம் கட்சியினர் அமர்ந்திருந்தனர். போலீஸார் வழக்கத்துக்கு மாறாக அதிக நெரிசலான நேரு வீதியில் தடுப்புகளை வைத்து தடுத்ததால் நேரு வீதியில் மறியல் நடந்ததால் நகரெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தலைமைச்செயலகம் சென்று அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அரசிடம் ரேஷன்கடை விவகாரங்கள் தொடர்பாக தெரிவிப்பதாக உறுதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.