புதுடெல்லி: ‘தேசிய அளவில் ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை ஒன்றிய அரசு பயன்படுத்துமா’ என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். உடல் ஊனமுற்றவர்களுக்கு ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லை தந்து அவர்களுக்கென தனி துறையையும், நல வாரியத்தையும் உருவாக்கி அவர்களின் நலன் காத்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் வழங்கியது, மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கியது போன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி கலைஞர் அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் காவலராக விளங்குகிறார். மேலும் தனது திரைக்கதை வசனம் மூலம் ஈட்டிய ரூ.45 லட்சத்தை மாற்றுத்திறனாளி துறைக்கு வழங்கி பயன்பெறச் செய்தவர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கை மற்றும் அரசுத் துறையின் பல்வேறு வரைவுகளில் ஊனமுற்றோர் என்னும் வார்த்தையை மாற்றுத்திறனாளி என்று மாற்றம் செய்யும் திட்டம் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்திடம் உள்ளதா என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். அதன் விவரம்: * மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கை மற்றும் ஒன்றிய அரசுத் துறையின் பெயர்கள், புத்தகங்கள், சட்ட முன்வரைவு உள்ளிட்டவைகளில், ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி என்று மாற்ற ஒன்றிய அரசு முன்மொழிகிறதா என்றும் அவ்வாறெனில் அத்தகைய உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்ற விவரங்களை தெரியப்படுத்தவும்.* மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கை குறித்து கலந்தாய்வு முறைக்கான வரைவு, சைகை மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் அக்கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதை ஒன்றிய அரசு அறிந்துள்ளதா என்றும், அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* முதலில் சைகை மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் வரைவுகள் வழங்கப்படாததற்கான காரணம் என்ன என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிராந்திய மொழி பேச்சாளர்கள் பயன்பெறும் வகையில் அத்தகைய வரைவுகள் வழங்கப்படுமா என்றும், அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* ஒன்றிய அரசின் புதிய தேசிய கொள்கை வரைவு குறித்து இதுவரை பொது மக்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் அளித்த கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் என்ன என்றும், அதுசார்ந்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.