புதுடெல்லி: மாலத் தீவுக்கு கூடுதலாக ரூ.786 கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் லட்சத் தீவுகளுக்கு தெற்கே மாலத் தீவு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலி 4 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது மாலத் தீவின் தலைநகர் மாலியுடன் 3 தீவுகளை இணைக்கும் புதிய பாலத்தின் கட்டுமான பணியை இந்திய பிரதமரும், மாலத்தீவு அதிபரும் இணைந்து தொடங்கி வைத்தனர். 7 கி.மீ. தொலைவிலான இந்த பாலம் இந்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் எக்சிம் வங்கி, பாலம் கட்டுமான பணிக்கு ரூ.3,144 கோடியை கடனாக வழங்குகிறது. அதோடு இந்திய அரசு சார்பில் கூடுதலாக ரூ.786 கோடி கடன் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
மாலத் தீவு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சி நிர்வாகத்தில் பயிற்சி வழங்குவது, சைபர் பாதுகாப்பு, ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பாக இரு நாடுகளிடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்திய அரசின் நிதியுதவியுடன் மாலத் தீவில் 4,000 வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. இதற்கு மாலத் தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்த சீனா தீவிர முயற்சி செய்து வருகிறது. எனினும் இந்தியாவுக்கே முதலிடம் கொடுப்போம் என்று மாலத்தீவு அதிபர் சோலி உறுதிபட தெரிவித்துள்ளார்.