நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை – காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட சுமார் 12 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேஷனல் ஹெரால்டு அலுவலகம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் பதாகைகளுடன் நேற்று போராட்டம் நடத்தினர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை நடத்தும் ஏஜெஎல் நிறுவனத்தின் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்களை, யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது. எனவே, இதை யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ள சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துக்களாக கருதப்பட வேண்டும் எனவும், இதற்கு அவர்கள் வரி செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை கூறுகிறது. ஏஜெல் நிறுவனத்தின் பங்குகளை, யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியதில் நிதி முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் சமீபத்தில் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சோனியா காந்தியிடம் 100-க்கு மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் 5 நாட்களுக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட ஏஜெஎல் நிறுவன சொத்துக்கள் இருக்கும் 12 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. எனவே இந்த சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகமான ஹெரால்டு ஹவுஸ் முன்பு, காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று குவிந்து, அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பதாகைகளை சுமந்தபடி அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய போதும், காங்கிரஸார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

அமலாக்கத்துறை சோதனை குறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில், “பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்து எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசால் பதில் அளிக்க முடியவில்லை. அதனால் எதிர்க்கட்சியினரை அவமானப்படுத்தவும், மிரட்டவும் அரசு முயற்சிக்கிறது” என்றது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சயீத் நசீர் ஹூசைன் கூறுகையில், “காங்கிரஸ் மட்டும் அல்ல, எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் தொந்தரவு செய்யப்படுகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி, இதற்கு அடிபணியாது” என்றார்.

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஹெரால்டு ஹவுஸ், பகதூர் ஷா ஜாபர் மார்க் ஆகிய இடங்களில் நடந்த சோதனை எல்லாம் காங்கிரஸ் கட்சி மீதான தொடர் தாக்குதலின் ஒரு அங்கம்தான். மோடி அரசுக்கு எதிராக பேசுபவர்களை பழிவாங்குவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.