சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவான் சென்றார் நான்சி பெலோசி..!

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். தைவானில் தரையிறங்கும் போது விமானப்படை ஜெட் விமானங்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தன.

பல்வேறு ஆசிய நாடுகளுக்கு சுற்றுபயணத்தை தொடங்கியிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் கடும் எதிப்பையும் மீறி நேற்று இரவு தைவான் சென்றடைந்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா உயர்மட்ட தலைவர் ஒருவர் தைவான் செல்வது இதுவே முதல்முறையாகும்.

தைவானை சீனா தங்களது நாட்டின் ஒரு பகுதியாக இன்னமும் கூறி வருவதாலும், நான்சி பெலோசியின் வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஏற்பட்டுள்ள பதட்டத்தாலும் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தைவானுக்கு வந்த நான்சி பெலோசி தைவான் விமானப்படையின் போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன.

அமெரிக்கா எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், தனது 4 போர் கப்பல்களை தைவானின் கிழக்கு பகுதியில் நிறுத்தியுள்ளது. இதில் ஒரு விமானந்தாங்கி போர்கப்பலும் அடங்கும்.

நான்சி பெலோசியை வரவேற்கும் வகையில் தைவானின் உயரமான கட்டிடமான தைபே 101-இல், வாசகங்கள் ஒளிரவிடப்பட்டன.

தைவானில் தரையிறங்கிய சில நிமிடங்களில் ட்விட்டரில் பதிவிட்ட நான்சி பெலோசி, ஜனநாயகத்தை காக்க தங்கள் ஆதரவை உறுதிபடுத்தவே தங்கள் குழுவினருடன் தைவான் வந்திருப்பதாக தெரிவித்தார். 

தைவான் பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு முரணாக இல்லை என்றும் நான்சி பெலோசி குறிப்பிட்டார்.

நான்சி பெலோசி தைவானில் தரையிறங்கிய பிறகு சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆபத்தானது என்றும், ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து சிதைத்து வருவதாகவும் குற்றம் சாட்டியது.

நெருப்புடன் விளையாடுவது போன்ற இந்த நகர்வுகள் மிகவும் ஆபத்தானவை என்றும், நெருப்புடன் விளையாடுபவர்கள் இதனால் அழிந்து போவார்கள் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று சீன போர் விமானங்கள் தைவான் கடற்பகுதியை பிரிக்கும் மத்திய கோட்டிற்கு அருகே பறந்ததாக கூறப்படுகிறது.

தைவானை சுற்றி ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

செவ்வாய் கிழமை இரவு முதல் தைவான் அருகே கூட்டு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தைவானின் வடக்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கூட்டு வான் மற்றும் கடல் பயிற்சிகள், நீண்ட தூர துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

நான்சி பெலோசியின் தைவான் பயணம் தொடர்பாக அமெரிக்க தூதருக்கு சீனா சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று இரவு சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸை அவசரமாக அழைத்த சீன துணை வெளியுறவு அமைச்சர் Xie Feng, நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.

இது அமெரிக்கா-சீனா அரசியல் அடிதளத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா அதன் தவறுகளுக்கு விலை கொடுக்க வேண்டும் என்றும், தனது தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்ளுமாறும் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.