வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தைபே: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றுள்ளார். இதனால், கோபமடைந்த சீனா, அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியதுடன், தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனால் தன்னாட்சி பெற்ற நாடான தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனிடையே அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்லவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. பெலோசியின் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எதிர்ப்புகளை மீறி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஸ்பெர்19 விமானத்தில் சபாநாயகர் பெலோசி தைவான் சென்றடைந்தார். 25 ஆண்டுகளில் தைவான் சென்றுள்ள அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி ஆவார். பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது. தைவான் சென்றுள்ள நான்சி பெலோசி, அந்நாட்டு பார்லிமென்டில் உரையாற்றினார். அந்நாட்டு அதிபர் சய் இங் வென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் நான்சி பெலோசி கூறுகையில், தைவானுக்கு அளித்துள்ள உறுதிப்பாட்டை நாங்கள் கைவிட மாட்டோம். இரு நாடுகளுக்கு இடையிலான நட்பை தெளிவுபடுத்துவதற்காக தைவானுக்கு வந்துள்ளோம். உலகில் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே போராட்டம் உள்ளது. ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக சீனா தனது மென்மையான சக்தியை பயன்படுத்துகிறது. இதனால், எனவே, தைவான் குறித்து, அதன் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் பேச வேண்டும். அந்நாடு மேலும் ஜனநாயகமாக மாறுவதற்காக அம்மக்களின் தைரியத்தை எடுத்து காட்ட வேண்டும்.
ஜனநாயகத்தின் போராட்டம் , சீனாவின் பிரதான நிலப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதற்கு வலுவான வேறுபாட்டை காட்டுகிறது. ஹாங்காங்கில் என்ன நடந்தது என்பதற்கு மேலும் ஆதாரம் தேவையில்லை. ஒரு நாடு இரண்டு நிர்வாகம் என்பது எங்கும் நடந்தது கிடையாது. தைவானுக்கு, வலுக்கட்டாயமாக எதுவும் நடக்கக்கூடாது என்பது எங்களது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
தைவான் அதிபர் சய் இங் வென் : வேண்டுமென்றே அதிகரிக்கப்பட்ட ராணுவ அச்சுறுத்தலை எதிர்கொண்டாலும் தைவான் பின்வாங்காது. ஜனநாயகத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம். இந்த இக்கட்டான தருணத்தில் தைவானுக்கு உங்களின் உறுதியான ஆதரவை காட்ட நடவடிக்கை எடுத்ததற்காக நான்சி பெலோசிக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
சம்மன்
நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை தொடர்ந்து சீனாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ்க்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி வரவழைத்தது.அப்போது, இணை அமைச்சர் ஷி பெங் கூறுகையில், நான்சி பெலோசியின் பயணம், மிகவும் மோசமானது. அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கும். சீனா சும்மா இருக்காது என்றார்.
ராணுவ பயிற்சி
சீன ராணுவம் கூறுகையில், தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளோம். பெலோசியின் பயணத்திற்கு பதிடியாக ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளது.
மேலும், தைவானை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது. இதில் சில நடவடிக்கைகள், தைவான் எல்லையில் இருந்து 20 கி.மீ., தொலைவில் இருக்கும் என சீன ராணுவம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement