வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான, 4,800 கோடி ரூபாய் ‘டெண்டர்’ முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில், நெடுஞ்சாலைத் துறையில் 4,800 கோடி ரூபாய் டெண்டரை, தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கே வழங்கினார் என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ல் அவர், மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஒத்தி வைத்தது.
ஆனால் இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், தமிழக அரசு வக்கீல் சமீபத்தில் முறையிட்டார். இதையடுத்து இந்த மனு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, இதில் வாதாடுவதற்கு அவகாசம் வேண்டும் என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி நேற்று தாக்கல் செய்த கூடுதல் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒப்பந்த பணிகளுக்கு அதிக விலை வழங்கியுள்ளதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக வங்கி வழிகாட்டு விதிமுறைகளை மீறி, தன் உறவினர்களுக்கு பழனிசாமி டெண்டர் வழங்கி உள்ளார். எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பழனிசாமியின் மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று, விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம், பழனிசாமி மீதான வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டியதில்லை எனக்கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement