சிவசேனாவில் ஜூன் மாதம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேயிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். சிவசேனாவில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தனியாக அழைத்துச் சென்று, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்திருக்கிறார். தற்போது உண்மையான சிவசேனா யாரது அணி என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அதிகமான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. தற்போது இரு தரப்பினரும் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி தேர்தல் கமிஷனில் மனுக்கொடுத்துள்ளனர். இது தவிர இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறி ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்ததால் அவர்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இவ்விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனை ஏற்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியால் வாக்காளர்கள் கோபமாக இருப்பதாக ஒரு கதையை அதிருப்தி கோஷ்டியினர் உருவாக்கி இருக்கின்றனர். உண்மையில் இந்த எம்.எல்.ஏ.க்கள் மகா விகாஷ் அகாடி அரசில் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்துள்ளனர். அப்போது கூட்டணி தொடர்பாக எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மகா விகாஷ் அகாடி அரசு பதவியேற்றதில் இருந்து கட்சி தொண்டர்களிடமோ அல்லது மக்களிடமோ அதிருப்தி இருப்பதாக அதிருப்தி கோஷ்டியினர் ஒரு போதும் தெரிவிக்கவில்லை. மகா விகாஷ் அகாடி கூட்டணியில் சிவசேனா இடம் பெறுவதை விரும்பாத பட்சத்தில் ஆரம்பத்திலேயே ஆட்சியில் பங்கேற்காமல் இருந்திருக்கவேண்டும். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக நியமித்தது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தது போன்ற அனைத்து நிகழ்வுகளும் விஷ மரத்தின் பழங்கள் ஆகும். அதற்கான விதைகளை துரோகம் செய்த எம்.எல்.ஏ.க்கள் வெட்கமின்றி உச்ச நீதிமன்றத்தில் விதைத்துள்ளனர். கட்சி விரோத செயல்களை மறைப்பதற்காக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இப்போது தங்களது அணி உண்மையான சிவசேனா என்று கூறி தேர்தல் கமிஷனை அணுகி இருக்கின்றனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி குஜராத் சென்று அங்கிருந்து அஸ்ஸாமில் பாஜக-வின் மடியில் உட்கார வேண்டிய அவசியம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. குஜராத், அஸ்ஸாமில் சிவசேனாவினர் இல்லை. எனவே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக-தான் முழு ஆதரவு கொடுத்தது என்பதை சொல்லத்தேவையில்லை. பாஜக-வை அதிருப்தி கோஷ்டியினர் தங்களது பழைய கூட்டணி கட்சி என்று கூறுகின்றனர். ஆனால் பாஜக சிவசேனாவை ஒருபோதும் சமமாக நடத்தியதில்லை” என்று உத்தவ் தாக்கரே அணியில் தங்களது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே தேர்தலில் தான் வெற்றி பெற சின்னம் அவசியம் இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். “எனது தொகுதி மக்களுக்கு அதிக அளவில் பணியாற்றி இருக்கிறேன். எனவே நான் வெற்றி பெற தேர்தல் சின்னம் தேவையில்லை. ஆனால் சிலர்(உத்தவ் தாக்கரே) ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை சந்திக்க நேரம் இல்லாமல் இருந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவி கேட்டு என்னிடம் வந்தனர். அவர்களுக்கு நான் வேலைகளை செய்து கொடுத்தேன்” என்று தெரிவித்தார். புனேயில் ஏக்நாத் ஷிண்டே பெயரில் ஒரு பூங்காவை திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பூங்காவை ஷிண்டே திறக்காமல் வந்துவிட்டார்.