'பொன்னியின் செல்வன்' பற்றி ராஜமவுலி சொன்ன கருத்து

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய நாவல் ஐந்து பாகங்களைக் கொண்டது. அதை இரண்டு பாகமாக எடுத்தால் கூட அதிகபட்சமாக 6 மணி நேரத்திற்குள் மட்டுமே அக்க முடியும். இருப்பினும் அந்த 6 மணி நேரத்திற்குள் மொத்த கதையையும் ஒரு படத்திற்குள் கொண்டு வருவதென்பது சாதாரண விஷயமல்ல.

'பொன்னியின் செல்வன்' நாவலை ஒரு வெப் தொடராக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பாகுபலி' இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

'த கிரேமேன்' படத்தின் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் உடன் நடைபெற்ற ஒரு பேட்டியின் போது இந்தத் தகவலை அவர் சொல்லியிருக்கிறார். 'ஆர்ஆர்ஆர்' படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக மேற்கத்திய நாடுகளின் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால், ஒரு நேரடி வெப் தொடரை இயக்கும் எண்ணம் இருந்ததா என்ற கேள்விக்கு 'பொன்னியின் செல்வன்'ஐ உதாரணமாக வைத்து ராஜமவுலி பதிலளித்துளளார்.

“ஓடிடிக்காக நேரடியாக வெப் தொடர்களை எடுக்க வேண்டும் என்ற ஐடியா இருந்தது. ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு முன்பாகவே அது இருந்தது. உதாரணத்திற்கு, மணிரத்னம் சார், தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்து வருகிறார். நீண்ட நாட்களாகவே அதை ஓடிடிக்காக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அதுதான் அப்படிப்பட்ட கதையைச் சொல்ல சரியான வழி. அந்தக் கதையை ஒரு திரைப்படமாக எளிதில் சொல்ல முடியாது. அதை வெப் தொடராக எடுத்திருந்தால் 8 மணி நேரத்திற்கோ, 15 மணி நேரத்திற்கோ, அல்லது 20 மணி நேரத்திற்கோ சொல்லலாம். இப்படி வெப் தொடராக சொல்ல பல கதைகள் நம்மிடம் உள்ளன. ஓடிடி தான் அதற்கு சரியான தளமாக இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார் ராஜமவுலி.

'பொன்னியின் செல்வன்' படத்தை சினிமா ரசிகர்கள், நாவல் ரசிகர்கள் ஆகியோர் எதிர்பார்த்திருப்பதைப் போல ராஜமவுலி போன்ற இயக்குனர்களும் மணிரத்னம் எப்படி சொல்லியிருப்பார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளார்கள் போலிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.