`வலிமை மிக்க பேச்சாளர் வைகோவிடம் இத கத்துக்கோங்க!'-அவையில் புகழ்ந்துதள்ளிய வெங்கையா நாயுடு

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உரையாற்றியிருந்தார். அவருக்கு மிகக்குறைவான நிமிடங்களே பேச ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்குள் தனது கருத்தை முன்மொழிந்துவிட்டார் அவர். இதைத்தொடர்ந்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, `வைகோ இந்தியாவின் சிறந்த பேச்சாளர். ஆனால் என்னால் அவருக்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போய்விட்டது’ என்று தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில், தொடக்கத்திலேயே வைகோவிடம் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, `தங்களுக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறது’ என்று கூறினார். இதைக்கேட்ட வைகோ, `இது அதிகமான நேரம்தான்!’ எனக்கூறி தனது உரையைத் தொடங்கினார்.
image
அதன்பின் அவர் பேசுகையில், `அன்றாடத் தேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நம் நாட்டு மக்களை மெதுவாகக் கொல்லும் ஒரு விஷம் ஆகும். உணவு தானியங்களின் விலை, மசாலாப் பொருட்களின் விலை, சமையல் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விலை ஆகியவையெல்லாம் அண்மையில் உயர்ந்துள்ளது. பணவீக்க விகிதம் 2 முதல் 6 சதவிகிதம் வரை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் இலக்கு இருந்தபோதிலும், பணவீக்க விகிதமும் உயர்ந்துள்ளது.
தாங்கள் இரண்டு நிமிடம் மட்டும் பேச அனுமதி வழங்கியதால், என்னுடைய உரையைக் குறைத்து, முக்கியமானவைகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சாதாரண குடிமக்கள் இப்போது விலைவாசி உயர்வு என்கிற தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு பெரும்பாலும் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கிறது.
image
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விகிதத்தை மட்டும் மத்திய அரசு அண்மையில் சிறிதளவு குறைத்துள்ளது. ஆனால் இந்த நிவாரணம் சாமானிய மக்களுக்கு ஒரு அடையாள நிவாரணம் மட்டுமே ஆகும். அரிசி, கோதுமை, பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது அவமானமாகும். இது பொருளாதாரத்தில் தொடர் பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவமனையில் வாடகைக்கு எடுக்கப்படும் ஐசியூ அறைக் கட்டணத்துக்குக் கூட வரி விதிக்கப்படுகிறது. வரி விதிப்பில் மத்திய அரசு துரதிஷ்டவசமாக யாரையும் எதனையும் விட்டுவைக்கவில்லை.
தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காரணமாக, எண்ணெய் இறக்குமதி கட்டணம் உட்பட அனைத்து இறக்குமதி பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. எனவே, உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக்கூறி, “நீங்கள் அனுமதி அளித்த நேரத்திற்கு உள்ளாகவே நான் என் பேச்சை முடித்துவிட்டேன்” என்று கூறி உரையை முடித்துவிட்டார்.
image
இதைக்கேட்ட அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, `இங்குள்ள இளைய – புது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வெளிப்படையான செய்தி என்னவெனில், இந்தியாவில் உள்ள வலிமை மிக்கப் பேச்சாளர்களில் வைகோவும் ஒருவர். இதை சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
image
அவர் சார்ந்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கை இந்த அவையில் குறைவாக இருப்பதால், அவருக்குப் பேச ஒதுக்கிய நேரத்தை நான் அதிகப்படுத்த முடியாமல் உள்ளேன். நான் காலவரையறைப்படி செல்ல வேண்டியது உள்ளது” என்று கூறி வைகோவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தகவல் உதவி: Sansad TVSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.