வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கி, தேர்தல் கமிஷன், நிடி ஆயோக், சட்ட கமிஷன், நிதி கமிஷன் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபத்யாயா தொடர்ந்த பொது நல வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன்பு இலவசங்களை, அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.தேர்தலுக்கு முன்னர் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஜனரஞ்சகமான அறிவிப்புகள், வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும். இதனை தேர்தல் ஆணையம் மனதில் வைத்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். என்றார்.
தலைமை நீதிபதி கூறுகையில், இலவசங்களை நிறுத்த எந்த கட்சியும் நினைக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இலவசங்கள் தொடரவேண்டும். இந்த விவகாரத்தில் நீண்ட விவாதம் நடத்த நாங்கள் விரும்பவில்லை. வரியாக செலுத்தப்படும் பணம் வளர்ச்சி போன்ற நோக்கங்களுக்காக செலுத்தப்படவில்லை என அனைவரும் நினைக்கின்றனர்.
ஒவ்வொரு கட்சியும் இலவசங்களால் பயனடைகிறது. இலவசங்களை எதிர்ப்பவர்கள், அதனை தடுக்க வேண்டும் என நினைப்பவர்கள், எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி, நிடி ஆயோக், நிதி கமிஷன், தேர்தல் கமிஷன், சட்ட கமிஷன் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழுஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இலவசங்கள் குறித்து ஆராய நீதிமன்றத்தால் அமைக்கப்படும் நிபுணர் குழு குறித்து அனைவரும் ஆலோசனையை தெரிவிக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆலோசனை கூற வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement