சென்னை: “அனைத்து கிராமங்களிலும் சமுதாயக் கூடம் அமைக்கும் திட்டத்தை தமிழகத்தில் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்த வேண்டும்” என்று மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரி ராஜ் சிங் நேற்று டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து, மரியாதை நிமித்தமாகவும், அதே நேரத்தில் தமிழகத்தினுடைய தேவைகளுக்கான கோரிக்கைகளையும் வைத்து வந்திருக்கின்றோம்.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் கிடப்பிலே வைத்திருந்த பல பணிகளை முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 18-19, 19-20, 20-21 ஆகிய ஆண்டுகளில் முடிக்கப்படாத பல பணிகளையும் முடித்து, அதற்கான தொகைகளையும் ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றிருக்கின்றோம்.
அந்த வகையில் கடந்த ஆண்டு, மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், அதைப் போல கடந்த மூன்று ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்டு, பணிகள் முடிக்கப்படாமல் இருந்த அந்த பணிகளையும் சேர்த்து 20 ஆயிரத்து 921 கோடி ரூபாய் அளவில் தொகையை பெற்றது மட்டுமல்லாது அந்தப் பணிகளை இந்த ஓராண்டு காலத்தில் சிறப்பாக செய்திருக்கின்றோம்.
அதற்காக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையினுடைய செயல்பாடுகளை ஒன்றிய அமைச்சர் பாராட்டியிருக்கிறார். அடுத்து தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலம். அதில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்காலம் தொட்டு சாலைகள் வெகுவாக குக்கிராமங்கள் கிராமங்கள் இவைகளைக் கூட அருகில் இருக்கக் கூடிய நகரங்களில் இணைத்த சாலை புரட்சியை அன்றைக்கே செய்திருந்தார். அந்த அடிப்படையில் மற்ற மாநிலங்களை விட கூடுதலாக சாலை வசதிகள் நிரம்பிய, அதிலும் கிராமச் சாலைகள் நிரம்பிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிற்கு அந்த சாலைகளுடைய நீளமும் இருக்கின்றது. ஆகவே அதை மேம்படுத்துவதற்கு, பராமரிப்புகளை செய்வதற்கு ஒதுக்குகின்ற நிதிகளை கூடுதலாக தர வேண்டும் என்ற கோரிக்கை இப்பொழுது வைக்கப்பட்டு இருக்கிறது. அதுபற்றி பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
கிராமங்களில் இருக்கக் கூடிய மக்கள், குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழக் கூடிய பகுதிகள், இன்னும் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பிரதான தேவையாகக் கருதப்படுவது சமுதாயக் கூடங்கள். அந்த சமுதாயக் கூடங்கள் பல தேவைகளுக்கு கிராம மக்களுக்கு மழை வாழ் மக்களுக்கு கடலோர மக்களுக்கு பயன்படுகிறது. ஆக பன்னோக்கு பயன்பாட்டிற்கு பயன்படுகின்ற அந்த சமுதாயக் கூடங்களுக்கான தேவைகள் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவில் ஒன்றிய அரசின் சார்பில் இதுவரை அதுபோன்ற திட்டம் இல்லை என்று சொன்னாலும் கூட, தமிழகத்தில் அதை முன்மாதிரியாக எடுத்து செய்திட வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறோம். இந்த இரண்டுக்கும் தேவையான மனுக்களையும் கோரிக்கையாக அமைச்சரிடம் கொடுத்திருக்கிறோம். அதை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்.
கடந்த ஜூன் 3ம் தேதி ஒன்றிய அரசினுடைய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் , நம்முடைய தமிழகத்தில், கோவை நகரில், தென் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடைய மாநாட்டை கூட்டுவதாக அறிவித்தார்கள். அந்த நாள் கலைஞர் அவர்களுடைய பிறந்த தினம் என்ற காரணத்தை சொன்னவுடன், அதேமாதம் 10ம் தேதி நடத்துவதாக இசைவு தெரிவித்தார்கள். 10ம் தேதி அவர் டெல்லியில் பிரதமரோடு நிகழ்ச்சியில் இருக்கின்ற காரணத்தால் அதுவும் தள்ளிப் போனது. இடைப்பட்ட காலத்தில் அவர் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார். இப்பொழுது நலம் பெற்று வந்திருக்கின்றார்.
அந்த அடிப்படையிலே எப்பொழுது தமிழகத்திற்கு வருகிறார், அந்த மாநாடு எப்போது நடக்க இருக்கின்றது என்பதை பற்றியும், அப்படி வருகின்ற நேரத்திலே, இந்தத் திட்டங்கள், நாங்கள் வலியுறுத்தி சொல்லியிருக்கின்ற திட்டங்கள், நடைமுறையில் இருக்கக் கூடிய திட்டங்களுடைய செயல்பாடுகள் பற்றி நேரிலும் ஆய்வு செய்யலாம் என்ற செய்தியினை சொல்லியிருக்கிறோம். விரைவில் அதற்கான தேதியை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்” என்று அமைச்சர் கூறினார்.