பெங்களூரு: சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு மத்திய – மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன; இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள், சமீப காலமாக கர்நாடகாவில் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இதை மத்திய அரசு ஆராய்ந்து, சுதந்திர தின விழாவில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை வாயிலாக எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக, மங்களூரு, உடுப்பி, கார்வார், பட்கல், ஹுப்பள்ளி, பெலகாவி, ஷிவமொகா, சிக்கமகளூரு உட்பட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் விசாரித்த போது, பெங்களூரு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டில்லி, ஜம்மு – காஷ்மீர் உட்பட பல மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாகவும், சதி செயல்களை அரங்கேற்ற திட்டம் தீட்டி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. போலீசார் அலட்சியமாக இருக்காமல், இரவு, பகல் பாராமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரதான ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., துங்கபத்ரா, பத்ரா, ஹாரங்கி, கபினி உட்பட பெரிய அணைகள், ஆன்மிக தலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் இது போன்ற எச்சரிக்கையை உளவுத் துறை விடுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement