ஹோட்டலில் கொள்ளை மேலாளர் அதிரடி கைது
விருகம்பாக்கம் : சாலிகிராமத்தில் உள்ள ஹோட்டலில் கைவரிசை காட்டிய மேலாளர் மற்றும் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டனர்.விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில், குப்தா பவன் என்ற தனியார் ஹோட்டல் உள்ளது. கடந்த 25ம் தேதி ஓட்டலில் நுழைந்த மர்ம நபர்கள், 55 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், காரில் வந்த மர்ம நபர், ஓட்டலின் ஷட்டரை திறந்து திருடிய காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.தொடர் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார், 33, என்பதும், கடந்த 13 ஆண்டுகளாக ஹோட்டலில் மேலாளராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.சில மாதங்களுக்கு முன், சென்னை முகப்பேரில் உள்ள கிளைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கிருந்து விடுப்பு எடுத்து சொந்த ஊர் சென்ற சிவகுமார், கார் ஒன்றை வாங்கி ஓட்டுனர் ராஜு என்பவருடன் சென்னை வந்துள்ளார்.பின், தன்னிடம் இருந்த ஹோட்டல் சாவியை பயன்படுத்தி, ஷட்டரை திறந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. பணத்தை திருடிய பின், சொந்த ஊர் சென்ற சிவகுமார், மீண்டும் முகப்பேர் கிளையில் வேலை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து சிவகுமார், 33, மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கார் ஓட்டுனரான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜு, 27, என்பவரையும், நேற்று முன்தினம் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
காணாமல் போன 2 சிறுமிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே காணாமல் போன பள்ளி மாணவிகளை தனிப்படை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 16 வயது சிறுமிகள் இருவர். பிளஸ் 2 படித்து வருகின்றனர்.
இவர்கள் மாமல்லபுரம் சென்று, சென்னையைச் சுற்றிப்பார்க்கும் ஆசையில் கடந்த 31ம் தேதி பெற்றோரிடம் சொல்லாமல் சென்னை சென்றனர்.இருவரும் காணாமல் போனது குறித்து திருநாவலுார் போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
எஸ்.பி., பகலவன் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் ஏட்டு அஷ்டலட்சுமி, திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடினர். சிறுமிகள் இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்து, அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற 79 வயது முதியவர்
ராமநாதபுரம் : குடியிருந்த வீட்டை அபகரித்தவர்களிடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற முதியவரை போலீசார் மீட்டனர்.ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அபுல்ஹசன் 79. இவரது மனைவி ஆயிஷா பீவி 70.இவர்கள் குடியிருந்த பூர்வீக வீட்டை போலி பத்திரம் தயாரித்து ஆறு மாதத்திற்கு முன் மரியம்பீவி உள்ளிட்ட சிலர் அபகரித்து விட்டதாகவும், தற்போது மாந்தோப்பில் தங்கியுள்ளோம்.
ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். எங்கள் வீட்டை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர். எங்கள் பூர்வீக வீட்டை கலெக்டர் மீட்டுத்தர வேண்டும், என்றனர்.தீக்குளிக்க முயன்றவர்களை கேணிக்கரை எஸ்.ஐ., தினேஷ்பாபு, கார்மேகம், தனிப்பிரிவு ஏட்டு சிவா மற்றும் போலீசார் மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
ஹிந்து முன்னணி நிர்வாகி கொலை; ஒன்பது பேர் ‘குண்டாசில்’ கைது
திருப்பூர் ; உடுமலையில், ஹிந்து முன்னணி நகர செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை, விஜயா நகரை சேர்ந்தவர் கவிதா. கடந்த மே 19ல், மகளிர் சுய உதவி குழுவில், 30 ஆயிரம் கடன் பெற்றதுக்கு, வளர்மதி என்பவர் உத்தரவாதம் அளித்தார்.
கவிதா, பணத்தை திரும்ப செலுத்தாமல், 22ம் தேதி வீட்டை காலி செய்ய முயன்றார்.இதுதொடர்பாக, வளர்மதி குடும்பத்தினர், குடும்ப நண்பர், ஹிந்து முன்னணி நகர செயலாளர் குமரவேல், 26 ஆகியோர், கடனை திரும்ப செலுத்த கவிதாவின் வீட்டுக்கு சென்று கேட்டு தகராறு செய்தனர். இதில், குமரவேலை ஒரு கும்பல் அடித்து கொன்றது.
இதுதொடர்பாக, உடுமலை தனிப்படை போலீசார் விசாரித்து, ஆதியப்பன், 43, சிவானந்தம், 30, செந்தில், 31, மாரியப்பன், 34, ஜான்சன், 31, ஆனந்தகுமார், 27, செல்வம், 23, ஹரிசாந்த், 21 மற்றும் அமர்நாத் பாலு, 30 ஆகியோரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., செஷாங் சாய், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் உத்தரவின் படி, இவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதற்கான நகல், சிறையிலுள்ள ஒன்பது பேரிடமும் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்