துரித பொருளாதார வளர்ச்சியை ஸ்திரமான நிலைக்கு உயர்த்துதல் எமது முயற்சியாகும்

பொருளாதார வளர்ச்சி வீதத்தை ஸ்திரமான நிலைக்கு உயர்த்துதல் அரசாங்கத்தின் முயற்சியாக உள்ளதோடு, 2026 ஆம் ஆண்டளவில் நிலையான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

2025-க்குள் முதன்மை வரவுசெலவு திட்டத்தில் உபரியாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அரச கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 140 சதவீதமாக உள்ளது. 2032 ஆம் ஆண்டளவில் இதனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நிலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டுக்குள் நிலையான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

           போராட்டக்காரர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்காக முன்நிற்கவும்

           ஒரு சிறப்பு பணியகம்.

                                                                ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து,  தமது கொள்கை அறிக்கையை முன்வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை இன்று (03) முற்பகல் ஆரம்பித்து வைத்து தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் ஆரம்ப விழா மிக எளிமையாக நடைபெற்றது.

பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

சம்பிரதாயமாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த அமர்வை முப்படையினரின் மரியாதை செலுத்துதலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தவும் ஜனாதிபதி கொடியை பயன்படுத்தாமல் இருக்கவும் ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்திருந்தார்.

பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, கொழும்பு தேவி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜெயமங்கல கீதம் பாடி ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.

ஜனாதிபதி அவர்கள் தனது கொள்கை அறிக்கையை சபையில் முன்வைத்து, அரசாங்கத்தின் தேசிய பொருளாதாரக் கொள்கைகளின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடருமானால், 2048 ஆம் ஆண்டில் சுதந்திரத்தின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் இலங்கையை முழுமையாக அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் எனக்குறிப்பிட்டார்.

தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறியதாவது:

அமைதியான வழியில் போராடுவது மனிதனின் அடிப்படை உரிமை ஆகும். அந்த உரிமைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் செயல்பாட்டாளர்களை வேட்டையாடப் போகிறேன் என்று சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சாரம் செய்ய சில குழுக்கள் முயற்சிக்கின்றன. ஆனால் அது உண்மையல்ல.

அமைதியான வழியில் போராடுபவர்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த நான் இடமளிக்க மாட்டேன். அமைதியான முறையில் போராடுபவர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்காக முன்நிற்கவும் சிறப்புப் பணியகம் ஒன்றை நிறுவுவேன்.

எவ்வாறான சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க மக்கள் பேரவையை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுப்பேன். இது தொடர்பாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து மக்களிடமும் கருத்து கேட்கும் பொறிமுறை இந்த மக்கள் பேரவை மூலம் தயாரிக்கப்படும். குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடாத இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முன்வருமாறு அழைக்கிறேன்.

இன்று நான் நடும் மரத்தின் பலனை நான் அனுபவிக்க மாட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நாளை, நம் குழந்தைகளும், வருங்கால சந்ததியும் அந்தப் பலனை அனுபவிப்பார்கள்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், பொது நிறுவனம் (அரச தொழில்முயற்சி) என்ற பொருளாதாரக் கருத்தியல் இருந்தது. ஆனால் இப்போது முழு உலகமும் அது ஒரு தோல்வி மற்றும் பயனற்றது என்பதை ஒப்புக்கொள்கிறது. சோசலிச நாடுகளான சீனா மற்றும் வியட்நாம் கூட இப்போது அரச தொழில்முயற்சி என்ற கருத்தியலை செயற்படுத்துவதில்லை. இந்த பழைய கருத்தை நாம் தொடர்ந்து கடைப்பிடித்தால், நம் நாடு மேலும் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாது. எனவே, நஷ்டத்தில் இயங்கும் இந்த அரச தொழில் முயற்சிகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதுவரை மேற்குலக நாடுகள்தான் உலகின் பொருளாதார வல்லரசுகளாக இருந்தன. ஆனால், 21ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரம் இந்து சமத்திரப் பிராந்திய பகுதிக்குச் சொந்தமாகிவிடும். இத்தகைய பின்னணியில், நமது நாட்டின் புவியியல் அமைவிடம் மிகவும் முக்கியமானது. இந்த சாதகமான நிலையை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது எதிர்கால நிறுவன சட்டங்களும் கொள்கைகளும் இதை மனதில் வைத்து உருவாக்கப்பட வேண்டும்.

எல்லா நேரத்திலும் கடன் வாங்கி நாட்டை நடத்த முடியாது. முடிந்தவரை கடன் வாங்குவதை குறைக்க வேண்டும். எனவே, இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட புதிய பொருளாதார சக்தியால் நமது நாடு பயனடையும் வகையில் விதிகள் மற்றும் கொள்கைகளை வகுக்க உங்களுடன் இணைந்து செயல்படுகிறேன்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தை இந்தியாவுடன் இணைத்து அபிவிருத்தி செய்ய தயாராக இருந்த வேளையில் அதனை இந்தியாவிற்கு விற்கிறார்கள் எனக் கூறி அபிவிருத்தி திட்டங்களை முடக்கினர். அன்று எண்ணெய் தொட்டி வளாகத்தை நாம் மேம்படுத்த முடிந்திருந்தால், இன்று மக்கள் எரிபொருள் வரிசையில் நாட்களைக் கடத்த வேண்டிய அவசியமில்லை.

சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டபோதும் இதே போன்ற எதிர்ப்பு எழுந்தது. சுவசெரிய ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்தால் உயிரிழப்பு நேரிடும் என்று சில மருத்துவர்கள் ஊடக சந்திப்பு நடத்த நடவடிக்கை எடுத்தனர். ஆனால் நாங்கள் எப்படியோ சுவசெரியவை ஆரம்பித்ததால், இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இலகு புகையிரத சேவையை நிறுவுவதிலும், துறைமுகத்தை மேம்படுத்தவும் ஜப்பான் முன்வந்தபோது, ​​அடிப்படையற்ற மற்றும் சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக் கூறி அதனை எதிர்த்தனர். இதன் காரணமாக, நமது நாடு பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த மூன்று (03) பில்லியன் டொலர்களுக்கு மேல் நாடு இழந்தது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-03

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.