ரகசிய 2ஆம் திருமணம்… தட்டிகேட்ட மனைவியை கொளுத்திய கணவன் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குழந்தை இல்லாததால் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த கணவனிடம் பிரச்னை செய்த மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள விட்டாநிலைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி என்ற‌ மதி (45). இவரது மனைவி மதலை அம்மாள்(45). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் வேளாங்கண்ணி மற்றொரு பெண்ணை அவரது மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இது அவரது மனைவி மதலை அம்மாளுக்கு தெரியவந்ததை அடுத்து தினசரி இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த 31.7.2021ஆம் ஆண்டு மதலை அம்மாளை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து வேளாங்கண்ணி கொளுத்தியுள்ளார். இதில் உயிருக்குப் போராடிய மதலை அம்மாளை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் 1.8.2021 அன்று உயிரிழந்தார்.
image
இந்நிலையில் அவர் சாகும்போது அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மதலை அம்மாளை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்து கொலை செய்த வேளாங்கண்ணி (எ) மதி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வேளாங்கண்ணி என்ற மதி மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அப்துல்காதர் இன்று தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளி வேளாங்கண்ணி (எ)மதி போலீசாரின் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.