புதுடெல்லி: நாடு முழுவதும் 51 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மொத்தம் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு முழுவதும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதன்படி கடந்தாண்டு அறிக்கையின்படி எய்ட்ஸ் நோய் தொற்று பாதிப்பு 46 சதவீதம் வரை குறைந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 24.01 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 45 சதவீதம் அல்லது 10.83 லட்சம் பேர் பெண்கள் மற்றும் 2 சதவீதம் பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (சுமார் 51,000 பேர்) ஆவர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3.94 லட்சம் பேரும், தொடர்ந்து ஆந்திரா 3.21 லட்சம் பேரும், தெலங்கானாவில் 1.56 லட்சம் பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த 2010ம் ஆண்டு முதல் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு உலகளவில் 32% ஆகவும், இந்திய அளவில் 46% ஆகவும் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.