3 படங்கள் படுதோல்வி; அக்ஷய் குமார் சம்பளம் குறைப்பு
8/3/2022 10:16:03 PM
மும்பை: சாம்ராட் பிருத்விராஜ் உள்பட 3 படங்கள் படுதோல்வி அடைந்ததால் அக்ஷய் குமாரின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தும் இந்திய நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் அக்ஷய் குமார். ₹130 கோடி முதல் ₹150 கோடி வரை ஒரு படத்துக்கு இவர் சம்பளம் பெறுகிறார். இந்நிலையில் இவர் கடைசியாக நடித்து வெளியான பெல் பாட்டம், பச்சன் பாண்டே ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. இவரது நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவான சரித்திர படம், சாம்ராட் பிருத்விராஜ். இந்த படம் ₹200 கோடி வசூல் ஈட்டும் என எதிர்பார்த்த நிலையில், வெறும் ₹40 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை தழுவியது.
இதனால் அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள படே மியான் சோஹ்டே மியான் படத்தில் அவரது சம்பளம் குறைப்பது தொடர்பாக அப்பட தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி, அக்ஷய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த படத்துக்கா ₹144 கோடி சம்பளமாக பெற அக்ஷய் குமாருடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது 3 படங்களின் தோல்வியால், 50 சதவீதம் வரை அக்ஷய்யின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் வெறும் ₹75 கோடிதான் இந்த படத்துக்கு சம்பளமாக பெறுவார் என தெரிகிறது. இதே படத்தில் மற்றொரு ஹீரோவாக டைகர் ஷெராப் நடிக்கிறார். அவர் நடித்த ஹீரோபன்த்தி 2 படமும் ஓடாததால் இந்த படத்தில் அவரது சம்பளம் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.