எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும், அநுராதபுரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மடு ஆவணி திருவிழா தொடர்பான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் என்ற காரணத்தால் விசேட ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மடு புகையிரத நிலையத்தில் இருந்து மடு திருத்தலத்திற்கு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் கொவிட் தொற்று பரவல் மீளவும் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து திருவிழா திருப்பலியில் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.