திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சுதந்திரம் வாங்கிய பின்பு உப்புக்கும், உணவுப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டது பா.ஜ.க அரசுதான். தமிழகத்துக்கான ஜிஎஸ்டி பணத்தை கேட்டுப்பெறும் நிலைக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
நீட் தேர்வைக் கொண்டு தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை அழித்த பா.ஜ.க அரசு, இப்போது தங்களது கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வை கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியுடன் இயங்கக்கூடிய நிறுவனம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில் சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தார்கள். ஆனால் மத்திய அரசு க்யூட் தேர்வைக் கொண்டு வந்ததன் மூலம் இவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. வடமாநில மாணவர்கள்தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையையும், சிபிஐ-யையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசு ஆணவமாகவும், அதிகாரமாகவும் செயல்பட்டால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது.
அ.தி.மு.க அரசு தமிழகத்தை 10 வருடங்கள் ஆண்டபோது 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் சுமையை ஏற்றி விட்டார்கள். உதய் மின் திட்டத்தில் அ.தி.மு.க அரசு கையெழுத்திட்டதால் இன்று மத்திய அரசு சொல்லும் அனைத்து சட்டத் திட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழகத்தில் இப்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது என மத்தியில் ஆளும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வினர் கூப்பாடு போடுகின்றனர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதய் மின் திட்டத்திற்கு கையெழுத்திட்டதுதான் தற்போது மின் கட்டண உயர்வுக்குக் காரணம்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு குறித்து மின்துறை அமைச்சர் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் கருத்துகளைச் சொல்லலாம் எனக் கூறியுள்ளார். லட்சக்கணக்கான பேர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். அது தொடர்பாக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்” என்றார்.