ஹைதராபாத்: பழம்பெரும் நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி (52). இவர் கடந்த திங்கட்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சில உடல் உபாதைகளாலும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் உமா மகேஸ்வரி இத்துயர முடிவுக்கு வந்ததாக அவரது கணவர் ஸ்ரீநிவாச பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உமா மகேஸ்வரியின் உடலைக் கைப்பறிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்குப் பின் அன்று இரவே உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். உமா மகேஸ்வரியின் மூத்த மகள் விசாலி அமெரிக்காவில் வசிப்பதால் அவரது வருகைக்காக உறவினர்கள் காத்திருந்தனர். விசாலி நேற்று அதிகாலை ஹைதராபாத் வந்ததை தொடர்ந்து, உமா மகேஸ்வரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, ஜூப்ளி ஹில்ஸ் மயானத்தில் எரியூட்டப்பட்டது. உடலுக்கு அவரது கணவர் ஸ்ரீநிவாச பிரசாத் இறுதிச் சடங்குகளை செய்தார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், நடிகர் பாலகிருஷ்ணா உட்பட குடும்பத்தினரும் அரசியல் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.