ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்தவர் கிரிதர் வர்மா (40) . இவர் கடந்த மூன்று மாதங்களாக ஏ.எஸ்.ராவ் நகரில் வசித்து வந்தார். வர்மா தொழில் நிமித்தம் காரணமாக ஃபைனான்சியர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடனாகப் பெற்று வியாபாரம் நடத்தி வந்திருக்கிறார். இவர், தான் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஃபைனான்சியர் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என வர்மாவை போன் செய்து அடிக்கடி தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. மனமுடைந்த வர்மா அவருடைய போனை எடுக்காமல் தவிர்த்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், அந்த ஃபைனான்சியர் வர்மாவின் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவியை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு இன்னும் மன உளைச்சலுக்கு ஆளான வர்மா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்காக அறைக்குச் சென்ற அவர்… அதிகாலை நீண்ட நேரமாகியும், வெளியே வரவில்லை. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய மனைவி ஜன்னலை திறந்து பார்த்திருக்கிறார். அப்போது வர்மா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்து வர்மாவின் சடலத்தை மீட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக காவல்துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து போலீஸார் ஃபைனான்சியர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வர்மாவின் அறையில் போலீஸார் சோதனையிட்டபோது, அவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தில், “நான் வியாபாரம் செய்ய 2010-ம் ஆண்டு ரூ.5 லட்சம் அந்த ஃபைனான்சியரிடம் கடனாக வாங்கினேன. அதை முழுவதுமாக செலுத்தி விட்டேன். ஆனால் ஃபைனான்சியர் மேலும் பணம் கொடுக்குமாறு மிரட்டி வருகிறார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.