காவிரியில் வெள்ளப்பெருக்கு: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து,  14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கவும் அறிவுறுத்தினார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விட்டுள்ளனர். மேலும் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஓகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய், உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காவிரி கரையோர மக்கள் மற்றும்  ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கனமழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எந்த வகையில் உள்ளது? வானிலை ஆய்வு மையம் எவ்வாறான தகவல் தெரிவித்துள்ளன? அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்பட்டிருக்கிறது? என்பது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்துறை சார்ந்த வருவாய் அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தொடர்ச்சியாக மழை அதிகமாக பெய்யும் மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.