அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் பணம் முதலீடு செய்வது மற்றும் செலவழிப்பது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு வித்திடும். எனவே, விஞ்ஞான ஆய்வுக்காக, குறிப்பாக விண்வெளித்துறை ஆய்வுக்காக தொடர்ச்சியாக தங்களின் பட்ஜெட்டில் கூடுதல் நிதியை இந்தியா ஒதுக்கீடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
உண்மையில், அறிவியல் வளர்ச்சி தொடர்பாக போதுமான நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை என்று தங்களின் மீது கூறப்படும் விமர்சனத்துக்கு பதில்கூறும் வகையில் செய்யப்பட்டவைதான் விண்வெளித்துறையில் இந்தியா செய்த பாதிக்கும் மேலான நிதி ஒதுக்கீடுகள். ஆனால், பல பில்லியன் டாலர்கள் மதிப்புமிக்க இத்துறையில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கும் நிலையில், உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு தோராயமாக இரண்டு சதவீதம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி., ரவிக்குமார் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். “உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் நமது நாட்டின் பங்கு என்ன? விண்வெளி ஆராய்ச்சியில் நமது நாட்டின் மோசமான செயல்பாட்டிற்கான காரணங்கள் யாவை? அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்படும் கால தாமதம் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?.” என்பன உள்ளிட்ட கேள்விகளை ரவிக்குமார் எம்.பி., எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “உலக விண்வெளிப் பொருளாதாரத்தின் (global space economy) சரியான அளவை மதிப்பிடுவது ஒரு சிக்கலானதும், விவாதத்திற்குரியதுமான விஷயம். 2019 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, உலக விண்வெளிப் பொருளாதாரம் 360 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதில் இந்தியாவின் பங்கு தோராயமாக 2 சதவீதம்.” என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பதில்
மேலும், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைமையில் – பூமி கண்காணிப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, விண்வெளி அறிவியல் மற்றும் வழிசெலுத்தல் உள்ளடக்கிய விண்வெளி சொத்துக்கள்; தரை உள்கட்டமைப்பு, மற்றும் தேசிய தேவைகள்; மனிதர்கள் மற்றும் சமூகத்தின் பொதுவான தேவைகளை நிவர்த்தி செய்யும் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் என அனைத்து களங்களிலும் உள்நாட்டுத் திறன்களைப் பெற்றுள்ளது. விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் இல்லை.” எனவும் எனவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தன் பதிலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., கூறுகையில், “விண்வெளி ஆராய்ச்சிக்காக பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பது விண்வெளிப் பொருளாதாரத்தின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரத்தின் அளவு குறைந்தது என்று இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சிக்கு 2020-21ல் பட்ஜெட் செலவினம் ரூ.9,500 கோடியாக இருந்தது, 2019-20 நிதியாண்டில் ரூ.13,033.2 கோடியாக அது இருந்தது.
ரவிக்குமார் எம்.பி.
இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தின் மதிப்பு 2018-19ல் ரூ.43,397 கோடியாக இருந்தது. அது 2019-20ல் ரூ.39,802 கோடியாகவும், 2020-21ல் ரூ.36,794 கோடியாகவும் சுருங்கிவிட்டது என Centre for Development Studies (CDS) என்ற அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. உண்மை இவ்வாறிருக்க அமைச்சரின் பதிலோ பூசி மெழுகுவதாக உள்ளது. இதற்குக் காரணம் இந்த அரசுக்கு அறிவியலின்மீது நம்பிக்கை இல்லாததுதான்.” என்று தெரிவித்துள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது என்று மார்த்தட்டி கொள்ளும் நிலையில், விண்வெளி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு கணிசமாக குறைந்து வருவது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான எல்லைப் பிரச்சினை இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பட்ஜெட்டில் இந்திய பாதுகாப்பு துறைக்கான நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், விண்வெளி ஆராய்ச்சியும் இணைந்துள்ளது கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயம்.