குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: “விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் வகையில் ரூ.22.34 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்கள் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வேளாண் கருவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.4), வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் ஆகியவற்றை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக, ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்துகலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

2021-22 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் “விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைக் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டத்தினை, நடப்பாண்டில் மேலும் வலுப்படுத்துவதற்காக, 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள், 185 கொத்துக் கலப்பைகள், 120 கேஜ் வீல்கள், நவீன முறையில் பூச்சி மருந்துகள் தெளிக்க 4 ட்ரோன்கள் ஆகியவை 23 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, விவசாயிகள் உழவுப் பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ரூ.22.89 கோடி மதிப்பீட்டில் 185 டிராக்டர்கள், நிலங்களில் உள்ள அப்புறப்படுத்தப்பட வேண்டிய செடி மற்றும் இதர புல் பூண்டுகளை பற்பல துண்டுகளாக்கி மண்ணுடன் கலந்து நிலத்திற்கேற்ற உரமாக்கும் வகையில் 185 ரோட்டவேட்டர்கள், மண் கட்டிகளை உடைத்து, நிலத்தின் கடினத் தன்மையை குறைத்து, முதல் நிலை உழவுக்கு பயன்தரக் கூடிய 185 கொத்து கலப்பைகள் மற்றும் சேற்று உழவிற்கு 120 கேஜ் வீல்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கிடுவதற்காக வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் இன்று, ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்துகலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.