கோவை: “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக என்பது பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்போல் இருக்கிறது” என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் கோவை மாநகர், மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோவை செல்வராஜ், அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு இன்று (ஆக.4) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்போல உள்ளது. அவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்றாலும் தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்துள்ளது.
தற்போதுவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது. கோவையில் விரைவில் கட்சியின் அனைத்து கிளைகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்.
தற்போதுள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் இல்லை. தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ் தரப்பிற்கு இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் 30 பேரை வைத்துக்கொண்டு பழனிசாமி பேசி வருகிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டாத கருத்துகளை கூறி வருகிறார். இப்படியே அவர் பேசி வந்தால் அவரது முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவரும்” என்றார்.