விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் நகரம் அருகே உள்ள ராவுத்தன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், கடந்த 27-ம் தேதி இரவு தனது ட்ராக்டர் மற்றும் அதன் பெட்டியை தன்னுடைய கடைக்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்துள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ட்ராக்டர் அங்கு இல்லையாம். மர்ம நபர்களால் ட்ராக்டர் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், சுற்றுவட்டார பகுதிகளில் தேடிப்பார்த்துள்ளார். அப்போதும் ட்ராக்டர் கிடைக்காததால் கடந்த 1-ம் தேதி அன்று ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ட்ராக்டர் திருட்டு போனது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ட்ராக்டரை மர்ம நபர்கள் யாரோ திருடிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த காவல்துறை அதிகாரிகள், 2-ம் தேதி அன்று சந்தேகத்திற்கு இடமான இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, ட்ராக்டர் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். புதுவை மாநிலத்தைச் சேர்ந்த செல்வம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் ராஜூ ஆகிய இருவரை கைதுசெய்த காவல்துறை அதிகாரிகள், மேற்கொண்டு விசாரணை நடத்திய போது, அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட செல்வம், ராஜூ இருவரும் அந்த விளையாட்டில் அதிக பணத்தை இழந்ததாகவும், இதனால் வீட்டிற்கு பதில் சொல்ல முடியாமலும் கையில் காசு இல்லாமல் சுற்றிக்கொண்டு வந்துள்ளனா். மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என்ற மோகத்தால், திருடுவதற்கு முடிவெடுத்தனராம். அதன்படி, புதுவை மாநிலத்தில் குடித்துவிட்டு ராவுத்தன்குப்பம் வழியாக சென்றபோது, தனியாக நின்றுக் கொண்டிந்த ட்ராக்டரை திருடிச் சென்றுள்ளனர். மேலும், அந்த ட்ராக்டரின் அடையாளம் தெரியால் இருக்க அதனுடை வண்ணத்தையும் மாற்றி அமைத்து ஓ.எல்.எக்ஸ் செயலி மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், விற்பனைக்கு தயாராக இருந்த திருடப்பட்ட ட்ராக்டரை அவர்களிடமிருந்து மீட்டுள்ளனர் போலீஸார். மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.