ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த நபர், தான் வேலைப்பார்த்த வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி, தங்க நகைகளை பறித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை வேளச்சேரி, ஷேசாத்ரிபுரம் பிரதான சாலையில் தனியாக வசித்து வருபவர் மூதாட்டி இந்துமதி (68). இவரது வீட்டில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கார் ஓட்டுநராக இஸ்மாயில் என்பவர் வேலை பார்த்துள்ளார்.
இஸ்மாயில் மனைவி விஜி என்பவர் இந்துமதியின் அக்கா வீட்டில் வீட்டு வேலை செய்து வருபவர். அவரது பரிந்துரையின் பேரில் இந்துமதியின் அக்கா வீட்டில் தேவைப்படும்போது ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர், நாளடைவில் இந்துமதி வீட்டிலும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இஸ்மாயில், ஆன்லைன் சூதாட்டம் விளையாடி 2 லட்சம் ரூபாய வரை பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
நாளடைவில் வேலையும் இல்லாமல் இருந்தபோது வடபழனியில் நண்பரோடு மது அருந்த சென்றுள்ளார். அப்போது சலாம்(35), என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் போதையில் தன்னுடைய பிரச்சனையை கூறிய இஸ்மாயிலுக்கு, சலாம் திருடி பணம் சம்பாதிக்க யோசனை கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் இருவரும் சேர்ந்து தனியாக வசிக்கும் மூதாட்டி இந்துமதியிடம் நகையை பறிக்க திட்டமிட்டு, கடந்த 30-ம் தேதி வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த வளையல், தங்கச்சங்கிலி, கம்பல் என 14 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து இந்துமதி கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர் போலீசார். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளைப் பார்த்த மூதாட்டி, இவர் என்னிடம் வேலை பார்த்த கார் ஓட்டுநர் போல் இருப்பதாக கூறியதின் பேரில், போலீசார் காவாங்கரையை சேர்ந்த இஸ்மாயில் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
அப்போது அவர் அங்கு இல்லை. தேனிக்கு சென்று தலைமறைவான நபரை, போலீசார் கோடம்பாக்கத்தில் உள்ள நபர் மூலம் சிம்கார்டு வாங்க வருமாறு சென்னை வரவழைத்து இஸ்மாயில் மற்றும் அவரது நண்பரான சலாம் இருவரையும் கைது செய்து 14 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதில் சலாம் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “கூடா நட்பு கேடாய் அமையும்” என்ற பழமொழிக்கேற்ப மதுக்கடை நட்பு கூடாத இடமான சிறைச்சாலைக்கு அனுப்பிய சம்பவமே சான்று.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM