சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். பிரதமர் மோடி தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் முதல்வர் வைத்துள்ள புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.13 முதல் 15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்ததுடன், தனது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் நேற்றுமுன்தினம் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்தார். “மூவர்ணக் கொடி நமக்கு வலிமையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட நம்மை ஊக்குவிக்கிறது” என்றும் பிரதமர் மோடி பதிவிட்டார். பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் தங்கள் வலைதள பக்கங்களில் தேசிய கொடியை பதிவேற்றம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். அதில், முன்னாள் முதல்வரும் தனது தந்தையுமான கருணாநிதி கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய புகைப்படத்தை பதிவிட்டு, “ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!” என்றும் பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!
#NewProfilePic pic.twitter.com/mWgAtmbQ9L
— M.K.Stalin (@mkstalin) August 4, 2022