பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வியை பெற்று வரும் நிலையில் தென்னிந்திய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்று வருகின்றன.
குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ , யாஷ் நடித்த கன்னட திரைப்படமான ‘கேஜிஎப் 2’ மற்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ஆகியவை தென்னிந்தியாவில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் குறிப்பாக வட இந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது.
தென்னிந்திய திரைப்படங்களின் அபார வெற்றி காரணமாக இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருமானம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஐநாக்ஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இரண்டு தென்னிந்திய திரைப்படங்களின் மாபெரும் வெற்றி காரணமாக அதிக வருவாயை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிவிஆர் – ஐநாக்ஸ் இணைப்பு கன்ஃபார்ம்.. தியேட்டர் வணிகத்தில் இவர்களின் ராஜ்ஜியம் தானா?
ஐநாக்ஸ் காலாண்டு அறிக்கை
மல்டிபிளக்ஸ் நிறுவனமான ஐநாக்ஸ் 2020ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.1.73 கோடியை ஒப்பிடுகையில், தற்போதைய காலாண்டில் ரூ.1.8 கோடி வருவாயுடன் இந்நிறுவனம் 6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் யாஷ் நடித்த ‘கேஜிஎப் 2’ ஆகிய படங்களின் ஹிந்தி பதிப்புகள் என ஐநாக்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
‘கேஜிஎப் 2’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’,
ஐநாக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அலோக் டாண்டன் அவர்கள் இந்த நிதியாண்டின் வருவாய் குறித்து கூறியபோது, ‘ தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன குறிப்பாக ‘கேஜிஎப் 2’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ஆகிய படங்கள் எங்களுக்கு மிகப்பெரிய வருவாயை அளித்தது’ என்று கூறியுள்ளார்.
வருமானம் அதிகரிப்பு
இந்திய பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.896 கோடியை ஈட்டிய ‘கேஜிஎப் 2’, ரூ.242 கோடி வியாபாரம் செய்த கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’, மற்றும் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படத்தின் வசூல் காரணமாக ஐநாக்ஸ் வருமானம் அதிகரித்துள்ளது.
பிவிஆர்
பிவிஆர் சமீபத்தில் தனது காலாண்டு நிதிநிலை முடிவுகளை பதிவு செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி, ஐநாக்ஸ் போலவே பிவிஆர் நிறுவனத்தின் வருவாயும் திருப்திகரமாக உள்ளது. இதுகுறித்து பிவிஆர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை திரையரங்குகளுக்கு செல்லும் பார்வையாளர்கள் பெரும் அளவில் உள்ளனர். இவர்களை அதிகமுறை திரையரங்குகளுக்கு மீண்டும் வரவழைக்க வேண்டும். அதற்கு பெரிய பட்ஜெட் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவர வேண்டும். அப்போதுதான் திரையரங்குகள் வளர்ச்சியை காணும்’ என்று கூறியுள்ளார்.
வருவாய் பகிர்வு
ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சில பகுதி, படத்தை விநியோகம் செய்பவர்களுக்கும், மீதமுள்ளவை திரையரங்கு உரிமையாளர்களுக்கும் செல்லும். ஆனால் கோவிட்-19 பாதிப்பின் காரணமாக இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் வாரத்தில் 60 சதவீதமும், இரண்டாவது வாரத்தில் 55 சதவீதமும், மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் 50 சதவீதமும் அதிக வருவாய் பங்கை வழங்குமாறு தயாரிப்பாளர்கள் கேட்டிருந்தனர். கோவிட்-க்கு முன், வருவாய் பகிர்வு முதல் வாரத்தில் 50 சதவீதமாகவும், இரண்டாவது வாரத்தில் 42 சதவீதமாகவும், மூன்றாவது வாரத்தில் 37 சதவீதமாகவும் இருந்தது’ என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
INOX records growth in Q1. Hindi versions of RRR and KGF 2 are main reasons
INOX records growth in Q1. Hindi versions of RRR and KGF 2 are main reasons | எகிறிய ஐநாக்ஸ் காலாண்டு வருமானம்.. இந்த 2 தென்னிந்திய திரைப்படங்கள் காரணமா?